ஏற்றுமதியாளர்களுக்கு உதவ ரூ.25,000 கோடியில் திட்டம் மத்திய அரசு பரிசீலனை
புதுடில்லி:பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், அடுத்த ஆறு நிதியாண்டுகளில் 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆதரவு திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது: இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், அடுத்த ஆறு நிதியாண்டுகளில், ஏற்றுமதியாளர்களுக்கு கிட்டத்தட்ட 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆதரவு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான கடன்களை எளிதாகவும், குறைந்த வட்டியிலும் வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மத்திய நிதி அமைச்சகத்தின் செலவின நிதி குழுவுக்கு இதுதொடர்பான பரிந்துரையை வர்த்தகத் துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. அனுமதி கிடைத்ததும், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு நிதி மற்றும் கடன் உதவி வழங்க 10,000 கோடி ரூபாயும்; சர்வதேச சந்தையில் இந்திய பொருட்களின் போட்டித்தன்மையை அதிகரிக்க 14,500 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.