உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உணவு பதப்படுத்தும் மானிய திட்டம் அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு

உணவு பதப்படுத்தும் மானிய திட்டம் அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு

சென்னை: பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்துக்கான கால அவகாசம் கடந்த செப்., மாதம் முடிவடைந்த நிலையில், 2027 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே இத்திட்டத்தில், 21,000 பேர் தொழில் தொடங்கிய நிலையில், அவகாசம் நீட்டிப்பால் மேலும் பலர் பயனடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுதும் உணவு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க, 'பிரதமர் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும்' திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்துகிறது. தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையின் கீழ் செயல்படும் தொழில் வணிக ஆணையரகம் அத்திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு மானியத்துடன், வங்கிகளில் கடனுதவி வழங்கப்படுகிறது. தனிநபருக்கு தொழில் தொடங்க திட்ட மதிப்பீட்டில், 35 சதவீதம் அதிகபட்சம், 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. மொத்த மானியத்தில் மத்திய அரசின் பங்கு, 60 சதவீதம், தமிழக அரசின் பங்கு, 40 சதவீதம். திட்ட அவகாசம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. திட்டத்தை நீட்டிக்க, மத்திய அரசுக்கு, பலரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, 2027 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !