மொபைல் போன் டவர்களுக்கான சொத்து வரியில் மாற்றம்
புதுடில்லி:மொபைல்போன் டவருக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு கிடைக்கும் வகையில், அது அமைந்துள்ள நிலத்தையும் டவரையும் வேறுபடுத்தி தொலைதொடர்புத் துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கிட்டத்தட்ட எட்டு லட்சம் மொபைல்போன் டவர்கள் உள்ள நிலையில், அவை அமைக்கப்பட்டுள்ள நிலத்துடன் சேர்த்து டவருக்கும் சொத்துவரி விதிக்கப்பட்டு வருகிறது. மொபைல் போன் டவருக்கும் சொத்து வரி விதிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை டவர் அமைக்கும் நிறுவனங்கள் வலியுறுத்தி வந்தன.நீண்ட கால கோரிக்கை நிறைவேறும் வகையில், நிலத்தில் இருந்து முற்றிலும் கழற்றப்பட்டு, அகற்றப்பட்டு வேறு இடத்தில் நிறுவப்படக்கூடியது என மொபைல்போன் டவரை வரையறுத்துள்ள தொலைதொடர்புத் துறை, அது அமைந்துள்ள நிலம் வேறு, டவர் வேறு என அறிவித்துள்ளது. இதனால், மொபைல் போன் டவருக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு கிடைக்கும் என்றும், டவர் அமைக்கும் நிறுவனங்களின் 10 ஆண்டுகளுக்கு மேலான சுமை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை, வரும் புத்தாண்டு தினத்தில் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.