உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பட்டய கணக்காளர் மண்டல மாநாடு சென்னையில் வரும் 22,23ல் நடைபெறுகிறது

பட்டய கணக்காளர் மண்டல மாநாடு சென்னையில் வரும் 22,23ல் நடைபெறுகிறது

சென்னை: இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பான ஐ.சி.ஏ.ஐ.,யின் தென்னிந்திய மண்டல கவுன்சிலின் சார்பில், 'ஆக்கம்' என்ற பெயரில், உயர்வை நோக்கிய முன்னேற்றம் என்ற தலைப்பில், இரண்டு நாள் மாநாடு, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வரும் 22, 23ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் குறிக்கும் ஆக்கம் எனும் சொல்லை தலைப்பாக கொண்டு, ஐ.சி.ஏ.ஐ.,யின் 57வது மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. சட்டம் இயற்றுபவர்கள், சர்வதேச கணக்கியல் நிபுணர்கள், தொழில்துறை தலைவர்கள், அனுபவமிக்க அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்று, உரையாற்ற உள்ளனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட பட்டயக் கணக்காளர்கள் பங்கேற்கின்றனர். தமிழக அரசின் சார்பில் ஒரு முக்கியஸ்தர், சர்வதேச கணக்காளர்கள் கூட்டமைப்பான ஐ.எப்.ஏ.சி.,யின் துணைத் தலைவர் டாரின் டான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, மாநாட்டைத் துவக்கி வைக்கவுள்ளனர். ஐ.சி.ஏ.ஐ., தலைவர் சரண்ஜோத் சிங் நந்தா, துணைத் தலைவர் பிரசன்ன குமார் ஆகியோர், மாநாட்டில் முக்கிய உரையாற்ற உள்ளனர். மேலும் மாநாட்டில், மூத்த வழக்கறிஞர்கள், ஐ.சி.ஏ.ஐ.,யின் முன்னாள் தலைவர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், முன்னணி நிறுவனங்களின் தலைமை நிதி அதிகாரிகள், ஜோஹோ, சி.பி.சி.எல்., சிபில் ஆகியவற்றின் சர்வதேச தலைவர்கள் ஆகியோரும் உரையாற்ற உள்ளனர். ஐ.சி.ஏ.ஐ., தென்னிந்திய மண்டலத்தின் தலைவராக, 1952ல் பணியாற்றிய சிவபாக்கியத்துக்குப் பின், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டாவது பெண் தலைவராக உள்ள ரேவதி ரகுநாதனின் தலைமையில், இந்த இரண்டு நாள் மாநாட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டுக்குப் பின், 10 ஆண்டுகள் கழித்து, சென்னையில், ஐ.சி.ஏ.ஐ., மண்டல மாநாடு நடைபெற உள்ளது. சிறப்பு மருத்துவ உதவி, லஷ்மண் ஸ்ருதி இன்னிசை, சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா மற்றும் உறுப்பினர் களின் நாடகம் ஆகியவையும் இடம்பெற உள்ளன. விருப்பத் தேர்வில், உறுப்பினர்களுக்கு திருப்பதி கோவில் உட்பட குறுகிய நேர பயணத் திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பட்டயக் கணக்காளர் உறுப்பினர்கள், தனியாகவோ, குழுவாகவோ http://www.sirc-icai.org/sircconference/ என்ற முகவரியில், உரிய கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்து, மாநாட்டில் பங்கேற்கலாம். 91767 88804 என்ற வாட்ஸப் எண்ணிலும் உதவி பெறலாம். Gallery முக்கிய தலைப்புகள் * சுற்றுச்சூழல், சமூக, நிர்வாக வாய்ப்புகளை வெளிப்படுத்துதல் * காலநிலை நிதி மற்றும் கார்பன் சந்தைகள் * வருமான வரிச்சட்டம் 2025 - விரிவான பார்வை * பட்டயக் கணக்காளர் பணியின் எதிர்கால பாதை * மின்னணு மாற்றம், தன்னாட்சி நிதி நிர்வாகம் * எட்டு ஆண்டுகளில் ஜி.எஸ்.டி., - தொட்டதும் விட்டதும் * சிபில் - விரிவான விளக்கம் * சட்டப்படி பதியப்படாத நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் * இணைய பாதுகாப்பு, தடயவியல் தணிக்கை - தொடர்புகள் * உலகமயமாக்கல், தடையற்ற வர்த்தகம், * வரிவிதிப்புகள் பி.எம்.எல்.ஏ.,வின் கீழ் பட்டயக் கணக்காளரின் பொறுப்புகள் * தேசிய நிதி தகவலளிக்கும் ஆணையத்தின் செயல்பாட்டில் பட்டயக் கணக்காளரின் பணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை