சென்னை:சென்னையில் 2025ல், 96 லட்சம் சதுரடி அலுவலக இடங்கள் குத்தகைக்கு பெறப்பட்டுள்ளன. குத்தகை இட உயர்வு விகிதத்தில், நாட்டிலேயே சென்னை முதலிடத்தை பிடித்துள்ளதாக 'கோலியர்ஸ்' நிறுவன கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.நாடு முழுதும் குடியிருப்பு திட்டங்களுக்கு இணையாக, தற்போது அலுவலக இடங்கள் கட்டுவது, விற்பது, குத்தகைக்கு கொடுப்பதும் அதிகரித்துள்ளது.குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் புதிய நிறுவனங்கள் வருவதால், கட்டுமான நிறுவனங்கள் அலுவலக வளாகங்கள் கட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்பு திட்டங்களை பிரதான பணிகளாக மேற்கொண்டு வந்த பாஷ்யம், காசா கிராண்ட், பிரிகேட், பிரஸ்டீஜ் போன்ற நிறுவனங்களும் அலுவலக வளாகம் கட்டுவதில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளன. ஐ.டி., பூங்கா மட்டும் கட்டி வந்த நிறுவனங்களும் தற்போது அலுவலக வளாகங்கள் கட்டுகின்றன.இந்த வகையில், சென்னையில் வீடு விற்பனைக்கு இணையாக அலுவலக வளாகங்கள் விற்பனை மற்றும் குத்தகையும் அதிகரித்துள்ளது. வணிக ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.'கோலியர்ஸ்' அறிக்கையின் விபரம்:சென்னை, பெங்களூரு, டில்லி, ஹைதராபாத், கொல்கட்டா, மும்பை, புனே ஆகிய நகரங்களில் அலுவலக இடங்கள் குத்தகைக்கு விடப்பட்டது குறித்து ஆய்வு செய்தோம்.இதில், சென்னையில், 2024ல், 68 லட்சம் சதுரடி அலுவலக இடங்கள் குத்தகைக்கு கொடுக்கப்பட்டன. இது, 2025ல் 96 லட்சம் சதுரடியாக உயர்ந்துள்ளது. இது, 41 சதவீதம் அதிகம்.அடுத்தபடியாக, கொல்கட்டாவில், இந்த உயர்வு விகிதம், 38 சதவீதமாக உள்ளது. புனேவில் இது, 37 சதவீதமாக பதிவாகி உள்ளது. நாடு முழுதும் பெருநகரங்களில் ஒட்டுமொத்த சராசரி உயர்வு, 6 சதவீதமாக உள்ள நிலையில் சென்னையில், இது, 41 சதவீதமாக உள்ளது.சென்னையில் அலுவலக இடம் சார்ந்த கட்டுமான திட்டங்கள் அதிகரிப்பு, அதை பயன்படுத்துவோரின் அதிகரிப்பும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.