மின்னணு பொருள் மறுசுழற்சி கட்டணம் அதிகம் என நிறுவனங்கள் போர்க்கொடி
புதுடில்லி:ஏசி, பிரிட்ஜ், டிவி, மொபைல் போன் போன்றவற்றின் மறுசுழற்சிக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டணத்துக்கு எதிராக டைகின், ஹிட்டாசி, ஹெவல்ஸ், வோல்டாஸ், சாம்சங் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்து உள்ளன.மறுசுழற்சி செய்வதற்கு அதிக செலவு ஏற்படுவதாக இந்நிறுவனங்கள் குற்றம்சாட்டி உள்ளன.இ- - வேஸ்ட் எனப்படும் மின்னணு கழிவுப்பொருட்கள் மேலாண்மையை முறைப்படுத்த, மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை கடந்தாண்டு செப்டம்பரில் மத்திய அரசு நிர்ணயம் செய்திருந்தது. இதன்படி, குறைந்தபட்சம், வீட்டு உபயோக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் மறுசுழற்சிக்கு கிலோவுக்கு 22 ரூபாயும், மொபைல் போன்களுக்கு கிலோவுக்கு 34 ரூபாயும் கட்டணமாக அறிவித்திருந்தது.புதிய மறுசுழற்சி கட்டணத்தால், மொபைல் போன் உள்ளிட்ட பிற சாதனங்களோடு ஒப்பிடுகையில், ஏர் கண்டிஷனர், பிரிட்ஜ் மற்றும் டி.வி., போன்ற சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், அதிக பாதிப்பை சந்திப்பதாக முன்னணி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், இந்த கட்டணத்தை தள்ளுபடி செய்யக்கோரி, கடந்த நவம்பர் முதல் மார்ச் வரை, ஹிட்டாசி, டைகின், ஹேவல்ஸ், வோல்டாஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. தங்களது உற்பத்தி செலவுகளை இது அதிகரிக்க செய்துள்ளதாக நிறுவனங்கள் மனுவில் தெரிவித்துள்ளன.முன்பு கிலோவுக்கு 6 ரூபாய் என செலுத்தி வந்த நிலையில், தற்போது நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக ஹிட்டாசி நிறுவனம் தெரிவித்து உள்ளது. வழக்கு தொடரவில்லை எனினும், மின்னணு கழிவுகள் மறுசுழற்சி கட்டணம் 8 சதவீதம் வரை தங்கள் உற்பத்தி செலவை அதிகரித்து உள்ளதால், கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி சாம்சங், எல்.ஜி., ஆகிய நிறுவனங்கள் அங்கம் வகிக்கும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சாதனங்கள் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.