உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கார்களில் ஸ்டெப்னி டயருக்கு கல்தா புதிய ட்ரெண்டுக்கு மாறும் நிறுவனங்கள்

கார்களில் ஸ்டெப்னி டயருக்கு கல்தா புதிய ட்ரெண்டுக்கு மாறும் நிறுவனங்கள்

நடப்பாண்டில் அறிமுகமான புதிய கார்களை வாங்குவோருக்கு, 'ஸ்டெப்னி' எனப்படும் ஐந்தாவது டயர் வழங்கப்படாது என்ற தகவல் ஆச்சரியமும், அதிருப்தியும் ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவில் தற்போது தயாரிக்கப்படும் கார்களில், 'டியூப்லெஸ் டயர்'கள் பயன்படுத்தப்படுகின்றன. பஞ்சரானால் அதை ஒட்ட கடை அருகில் இல்லாத சமயத்தில், வேறு வழியின்றி மாற்று டயர் பொருத்துவது அவசியமாகிறது. அதிகரித்து வரும் மின்சார கார்களில் ஸ்டெப்னி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது, ஹைபிரிட் எனப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட எரிபொருளில் ஓடும் கார்கள் மற்றும் எரிவாயு கார்களும், இந்த புதிய டிரெண்டுக்கு மாறி வருகின்றன.அண்மையில் வெளியான மாருதியின் விக்டோரிஸ் எஸ்.யு.வி., காரின் எந்த மாடலிலும் ஸ்டெப்னி வழங்கப்படவில்லை. அதேபோல், மாருதி பிரான்க்ஸ், டாடா சபாரி, ஹேரியர் கார்களின் சில மாடல்களுக்கும் இது தரப்படுவதில்லை. இந்த ட்ரெண்டை, மற்ற கார் நிறுவனங்களும் பின்பற்ற அதிக வாய்ப்புள்ளது என்கின்றனர் வாகன நிபுணர்கள்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:சர்வதேச நாடுகளில், கார் நிறுவனங்கள் ஸ்டெப்னி டயர் வழங்குவதில்லை. இதனால், பல நன்மைகள் இருந்தாலும், நம் நாட்டு சாலை கட்டமைப்புகளுடன் ஒப்பிடுகையில், அது அவசியமாகிறது. நெடுஞ்சாலைகள் தரமாக இருந்தாலும், நகர்ப்புற சாலைகள், கிராமப்புற சாலைகள் நன்றாக இல்லை.நகரங்களுக்குள் கார் ஓடும்போது பஞ்சரானால், அதை சரிசெய்ய கடைகள் அதிகம் உள்ளன. ஆனால், கிராமப்புறங்களில் மிகக்குறைவு. நெடுஞ்சாலை பயணத்தின் போது பஞ்சர் ஏற்பட்டால், பெரும்பாலான ஓட்டுநர்களுக்கு டயர் மாற்றுவது குறித்து தெரியும்; எளிதாக மாற்றி விடலாம்.ஆனால், ஸ்டெப்னி இல்லாத சமயத்தில், பஞ்சர் ஒட்டுவதற்கு முன் அனுபவம் தேவைப்படுகிறது. டயர்களை சேதப்படுத்தாமல் பஞ்சர் ஒட்ட வேண்டும், இக்காலத்தில் இது பலருக்கு தெரியாது. அதுவும், கரடுமுரடான சாலைகளில் பயணிக்கும் போது, டயரின் பக்கவாட்டு பகுதி சேதம் அடைந்தால், டயரை மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை.இவ்வாறு கூறினர்.

இனி மெல்ல மறையும்

ஸ்டெப்னி வழங்கப்படாமல் இருப்பதற்கு, கடந்த 2020 அக்., 1ல் அமலுக்கு வந்த மத்திய மோட்டார் வாகன புதிய விதிகள், முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது, டியூப்லெஸ் டயர்கள், டயர் அழுத்தத்தை சோதிக்கும் கருவி, பஞ்சர் கிட் ஆகிய வசதிகள் கட்டாயம் வழங்கப்பட்டால், 9 சீட்டர் வரை உள்ள 3.5 டன் எடைக்கு குறைவான கார்களில், ஸ்டெப்னி வழங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இதனால், காரின் எடை குறைவது மட்டுமின்றி, ஹைபிரிட் மற்றும் மின்சார கார்களின் பேட்டரியை பொருத்த தாராளமான இடவசதி கிடைக்கிறது. இது, காரின் எரிவாயு திறன் மற்றும் ரேஞ்சை அதிகரித்து, கூடுதல் செலவை குறைக்கவும் செய்கிறது.நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை