உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சமையல் எண்ணெய் இறக்குமதி ஆகஸ்டில் 7 சதவீதம் விர்ர்...

சமையல் எண்ணெய் இறக்குமதி ஆகஸ்டில் 7 சதவீதம் விர்ர்...

புதுடில்லி : கடந்த மாதம் நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி ஏழு சதவீதம் அதிகரித்து 16.77 லட்சம் டன்னாக இருந்தது என, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியதை தொடர்ந்து, இதன் இறக்குமதி குறைந்துள்ளபோதிலும், மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி அடிப்படையில், அதிகரித்துள்ளது. இறக்குமதியில் கச்சா சார்ந்த சமையல் எண்ணெய் ரகங்களின் பங்கு 16.13 லட்சம் டன்னாக இருந்தது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின் பங்கு 92,130 டன்னிலிருந்து 8,000 டன்னாக குறைந்துள்ளது. கச்சா பாமாயில் மீதான இறக்குமதி வரியை, மத்திய அரசு கடந்த மே மாத இறுதியில் 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைத்தது. இதன் காரணமாக கச்சா பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இடையேயான இறக்குமதி வரி வித்தியாசம் 19.25 சதவீதமாக அதிகரித்தது. அரசின் இந்த முடிவு, உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு துறையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளதாக இந்திய எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உலகளவில் சமையல் எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வில் மிகப்பெரிய நாடாக விளங்கும் இந்தியா, கடந்த மூன்று மாதங்களாக அதிக அளவிலான எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. இதனால், கடந்த செப்டம்பர் 1ம் தேதி நிலவரப்படி, நாட்டின் சமையல் எண்ணெய் கையிருப்பு 18.65 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை