உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி இப்போதைக்கு குறைக்க முடிவு

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி இப்போதைக்கு குறைக்க முடிவு

புதுடில்லி: ரஷ்யாவிடமிருந்து நேரடியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா இப்போதைக்கு குறைத்துக்கொள்ள உள்ளதாக கடல்சார் ஆய்வு நிறுவனமான கெப்லர் தெரிவித்துள்ளது. உக்ரைன் போரை காரணம் காட்டி, ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ராஸ்நெப்ட் மற்றும் லுாக்ஆயில் மீது அமெரிக்கா கடந்த மாதம் பொருளாதார தடை விதித்தது. இந்த தடை வரும் 21ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. தடை அறிவிக்கப்பட்டதும் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதமும் அந்நாட்டிலிருந்தே இந்தியா அதிகளவிலான கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. அதே நேரத்தில் கடந்த 21ம் தேதிக்கு பின் இந்தியாவுக்கான ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கெப்லர் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் 50 சதவீதத்துக்கும் அதிக பங்கு கொண்டுள்ள இந்திய நிறுவனங்கள், அடுத்த மாதம் முதல் நேரடி இறக்குமதியை குறைக்க முடிவு செய்துள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பொதுத்துறையை சேர்ந்த மாங்களூர் ரிபைனரி மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் - மிட்டல் எனர்ஜி நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன. இதன் காரணமாக டிசம்பரில் ரஷ்ய கச்சா எண்ணெய் வரத்து குறையும். எனினும் இது முற்றிலுமாக நிறுத்தப்படாது. நேரடி இறக்குமதி பாதிப்புக்கு உள்ளானாலும், இடைத்தரகர்கள் மற்றும் பிற வர்த்தக வழிமுறைகள் வாயிலாக இந்தியாவில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்துக்கு பின் படிப்படியாக ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிஅதிகரிக்கும். இவ்வாறு தெரிவித்து உள்ளது. சாராம்சம்: அமெரிக்கா தடை விதிப்பால், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தற்போதைக்கு குறைத்துள்ளன. எனினும், நேரடி இறக்குமதியை தவிர்த்து, சர்வதேச இடைத்தரகு நிறுவனங்கள் வாயிலாக, மாற்று வழியில் இறக்குமதி படிப்படியாக பிப்ரவரிக்கு பின் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை