கோவையில் அமைகிறது எலக்ட்ரிக் வாகன ஆய்வகம்
கோவை:கோவையில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான உயர் ஆய்வகம் அமைப்பதற்கு தேவையான பரிசோதனை உபகரணங்களுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. கோவையில், 'கொடிசியா, சீமா' ஆகியவற்றின் சார்பில், 'சிடார்க்' எனப்படும், அறிவியல் மற்றும் தொழிற்சாலை பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி மையம், கடந்த 1987 முதல் செயல்பட்டு வருகிறது. உணவு, வேளாண் பொருட்கள், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சோலார் என, தொழில் துறைக்கு தேவையான 12 பரிசோதனை மற்றும் காலிபிரேசன் ஆய்வகங்கள் இந்த அமைப்பு சார்பில் செயல்பட்டு வருகின்றன. பம்ப் தொழிலுக்கான உயராய்வகமும் அமைய உள்ளது. தமிழக அரசுடன் இணைந்து, 'சிடார்க் இ.வி., பவுண்டேஷன்' அமைக்கப்பட்டு, அதன் சார்பில், எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான ஆய்வுகள், பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆய்வகம் 9.25 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், தமிழக அரசு 8.25 கோடி ரூபாய் பங்களித்துள்ளது. துவக்க கட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பரிசோதனை உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. சிடார்க் தலைவர் மோகன் செந்தில்குமார் கூறுகையில், “சிடார்க் மின்வாகன அறக்கட்டளை சார்பில், இரண்டு மற்றும் மூன்று சக்கர மின் வாகனங்களுக்கான மோட்டார், கன்ட்ரோலர், பேட்டரி உள்ளிட்ட அனைத்து வகையான கருவிகளை ஆய்வு செய்வதற்காக, சி.எப்.சி., எனப்படும் பொது வசதி மையத்துக்கு, உயர்திறன் தானியங்கி பரிசோதனை இயந்திரங்கள் வாங்க, டெண்டர் கோரப்பட்டு உள்ளது. “விரைவில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்படும். வரும் ஜன.,யில் இருந்து ஆய்வகத்தை இயக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்,” என்றார்.