உழவர் - உற்பத்தியாளர் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
புதுடில்லி: உழவர் -உற்பத்தியாளர் அமைப்புகள் எனப்படும் எப்.பி.ஓ., நிறுவனங்கள் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டிக்க உள்ளது. சி.ஐ.ஐ., அமைப்பு டில்லியில் நடத்திய இதுதொடர்பான உச்சிமாநாட்டில், மத்திய வேளாண் செயலாளர் தேவேஷ் சதுர்வேதி கூறியதாவது: உழவர் - உற்பத்தியாளர் நிறுவனங்கள் பலவும் அடுத்த கட்ட வளர்ச்சியை அடைவதில் பல்வேறு இடைவெளிகள் உள்ளன. அவற்றை சரிசெய்து, ஊக்குவிப்பதற்காக இத்திட்டத்தை 2026 - -31ம் ஆண்டுகள் வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில், இந்த திட்டத்தின்கீழ் 5 ஆண்டுகளில் 10,000 எப்.பி.ஓ., அமைப்புகள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது அந்த இலக்கு எட்டப்பட்டாலும் அந்த நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. பல நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் துவங்கப்பட்டவை. பல்வேறு அமைப்புகள், முகமைகளுடன் சேர்ந்து இவற்றை வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. தற்போது மேம்படுத்தப்படும் இத்திட்டம் செயல்திறன் மிக்க, ஆற்றல் கொண்டதாகும். இதன்மூலம் விவசாயிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வேளாண் அமைச்சகம், கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு, எப்.பி.ஓ., நிறுவனங்கள் துவங்கப்பட்ட 3 முதல் 5 ஆண்டுகளில் அவற்றுக்கு கடும் அபராதம் விதிக்கும் நடைமுறையை தளர்த்த கேட்டுக்கொள்ளப்பட்டது. விவசாயிகளின் மூலதனமான பங்குத்தொகைக்கு இணையான மானியத்தை அரசு கொடுக்கிறது என்றாலும், அதற்கு 30 லட்சம் ரூபாய் என்ற மானிய வரம்பு உள்ளது. பெரிய அளவில் வர்த்தகத்தை செயல்படுத்த இது, தடையாக உள்ளது. இதனை 50 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும். எப்.பி.ஓ., என்பது... விவசாயிகள் ஒன்றுகூடி ஒரு நிறுவனமாக பதிவு செய்து கொள்வது 10 விவசாயிகள் இருந்தாலே நிறுவன சட்டத்தில் பதிவு செய்யலாம் கொள்முதல், உற்பத்தி, விற்பனை, மதிப்பு கூட்டலை இந்நிறுவனங்கள் செய்யும் அதன் லாப நஷ்டங்கள் விவசாயிகளுக்குள் பகிரப்படும் நம் நாட்டில் இப்போது 40,000 - 50,000 எப்.பி.ஓ., நிறுவனங்கள் உள்ளன நாட்டில் 52 லட்சம் விவசாயிகள் எப்.பி.ஓ., உறுப்பினர்களாக உள்ளனர்.