உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பொது பங்கு வெளியீடுகளில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்

பொது பங்கு வெளியீடுகளில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்

பங்குச்சந்தையில் நுழைவும் நிறுவனங்களின் பொதுப் பங்கு வெளியீடு (ஐ.பி.ஒ., ) பரவலாக கவனத்தை ஈர்க்கின்றன. எனினும், சில்லறை முதலீட்டாளர்களை பொருத்தவரை பங்கு வெளியீடுகளை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். அதிலும் குறிப்பாக, புதிய பங்குகள் பட்டியலிடப்படும் போது அளிக்க கூடிய ஆதாயத்தை எதிர்பார்த்து முதலீடு செய்வதில் கூடுதல் எச்சரிக்கை அவசியம். புதிய வெளியீட்டிற்கு அதிக விண்ணப்பங்கள் குவியும் போது, அறிமுக நாளிலேயே விலை அதிகரித்து லாபம் அளிக்கும் எனும் எதிர்பார்ப்பு கவர்ந்திழுத்தாலும், இதில் உள்ள இடர்களை அறிய வேண்டும்.

பட்டியல் பலன்:

ஒரு சில புதிய பங்குகள், சந்தையில் பட்டியலிடும் நாளிலேயே விலை உயர்ந்து லாபத்தை அள்ளித்தரலாம் என்பது உண்மை தான். ஆனால் இதை சரியாக கணிப்பது எளிதல்ல என்பதை உணர வேண்டும். சில்லறை முதலீட்டாளர்களுக்கு இது ஏற்ற உத்தியாகவும் அமையாது என்பதை உணர வேண்டும்.

பங்கு ஒதுக்கீடு:

பட்டியல் தினத்தன்று லாபம் பெற முதலில், பங்கு வெளியீட்டைல் ஒதுக்கீடு பெற்றிருக்க வேண்டும். பெரும்பாலும் நிறுவன முதலீட்டாளர்களுக்கும், அதிக மதிப்பு கொண்ட முதலீட்டாளர்களுக்குமே அதிக ஒதுக்கீடு வழங்கப்படும் நிலை உள்ளது. சில்லறை முதலீட்டாளர்களுக்கு சொற்பமாகவே கிடைக்கும் அல்லது இல்லாமலும் போகலாம்.

இடர் அதிகம்:

பங்கு வெளியீட்டில் ஒதுக்கீடு கிடைத்தாலும் கூட, பட்டியல் தின ஆதாயத்திற்காக மட்டுமே அதை வைத்திருப்பது இடர் மிக்கது. பல பங்குகள் வெளியீட்டிற்கு சரிவை சந்தித்துள்ளன. தெளிவான உத்தி இல்லாமல் பங்குகளை வாங்கி வைத்திருக்கும் போது, பங்குகளை தாமதமாக அல்லது முன்கூட்டியே விற்க நேரலாம்.

அடிப்படை ஆய்வு:

முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்த்த பல வெளியீடுகள் சந்தை செயல்பாட்டில் ஏமாற்றத்தை அளித்துள்ளன. அதே நேரத்தில் அதிகம் எதிர்பார்க்காத வெளியீடுகள் ஏற்றம் கண்டு நல்ல பலன் அளித்துள்ளன. எனவே அடிப்படை அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

நீண்ட கால நோக்கம்:

பங்கு முதலீட்டில் நீண்ட கால அணுகுமுறையே ஏற்றது என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. பங்கு வெளியீட்டிற்கும் இது பொருந்தும். குறுகிய கால ஆதாயங்களை விரட்டிச் சென்று தவறான முடிவுகளை மேற்கொண்டு தவிப்பதைவிட, அடிப்படைகளில் கவனம் செலுத்துவதே ஏற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி