பாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் விரிவாக்கம்
சென்னை:பாக்ஸ்கான் நிறுவனம், இந்தியாவில் அதன் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ஐபோன்களுக்கான என்குளோசர் எனும் உடற்பாகத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பிரிவை தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள அதன் 'டிஸ்பிளே மாட்யூல்' தயாரிப்பு ஆலையில் அமைப்பதற்கான பணிகளை தற்போது துவக்கியுள்ளது. டாடா நிறுவனம் மட்டுமே தற்போது இந்த பாகத்தை உள்நாட்டில் தயாரித்து வழங்கும் ஒரே நிறுவனமாக உள்ளது. இந்நிலையில், பாக்ஸ்கானும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் வாயிலாக, ஒட்டு மொத்த ஐபோன் உற்பத்தி மதிப்பு 2 முதல் 3 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிதமான வளர்ச்சி என்றாலும், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வளர்ச்சி யாக கருதப்படுகிறது. கடந்த நிதியாண்டில், 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆப்பிள் ஐபோன்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.