ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி 10 சதவிகிதம் வளர்ச்சி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஆர்வம்
திருப்பூர்: ஐரோப்பிய நாடுகளுக்கு இந்திய ஆடை இறக்குமதி, கடந்த ஜன., முதல், செப்., மாதம் வரை, 7.14 சதவீதம் அதிகரித்துள்ளது; இந்தியாவின் ஏற்றுமதி யும், 10 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது ஐரோப்பிய சந்தை.மொத்தம், 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய சந்தையில், இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஜன., துவங்கி, செப்., மாதம் வரையிலான, ஒன்பது மாதங்களில், 6.84 லட்சம் கோடி ரூபாய்க்கு, ஐரோப்பா ஆடை இறக்குமதி செய்துள்ளது; இது, கடந்த ஆண்டை காட்டிலும், 7.14 சதவீதம் அதிகம். சீனா முதலிடத்திலும், வங்கதேசம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. துருக்கிக்கு அடுத்தபடியாக, நான்காவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் இருந்து, செப்., வரை, 37 ஆயிரத்து, 600 கோடி ரூபாய்க்கு ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது; இது, கடந்தாண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகம். துருக்கியில் நிலவும் குழப்பத்தால், அந்நாட்டின் ஐரோப்பிய ஏற்றுமதி, 9 சதவீதம் குறைந்துஉள்ளது. இதை, இந்தியாவுக்கான வாய்ப்பாக மாற்ற ஏற்றுமதியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். 'இந்தியன் டெக்ஸ் பிரனர்ஸ் பெடரேஷன்' கன்வீனர் பிரபு தாமோதரன் கூறுகையில், ''சீனா, வங்கதேசம் போன்ற நாடுகள், விலையை குறைத்து வழங்கி, ஐரோப்பிய சந்தையில் கடும் போட்டியை உருவாக்கியுள்ளன. ''இந்தியாவின் பங்களிப்பு, 5 முதல் 6 சதவீதம் அளவில் தொடர்கிறது; ஒன்பது மாதங்களில், 10 சதவீதம் வளர்ச்சி கிடைத்துள்ளது. வியட்நாம், கம்போடியாவும் கடும் போட்டியாக மாறியுள்ளன. ''ஐரோப்பாவுடன், 2026ல் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி, 2027 முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது,'' என்றார்.