தங்கத்துக்கு வரி கிடையாது: டிரம்ப் அறிவிப்பால் விலை சரிவு
புதுடில்லி: தங்கத்துக்கு வரி விதிக்கப்படாது என, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை நேற்று கிட்டத்தட்ட இரண்டு சதவீதம் குறைந்தது. தங்க கட்டிகளுக்கும் வரி விதிப்பு பொருந்தும் என, அமெரிக்க சுங்கத்துறை கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, கிடுகிடுவென விலை உயர்ந்தது. ஒரு அவுன்ஸ் தங்கம், அதாவது கிட்டத்தட்ட 28.35 கிராம் விலை 3 லட்சம் ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வரி விதிப்பு பொருந்தும் என்பது தவறான தகவல் என்றும், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தப்படும் என்றும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் அப்போது தெரிவித்தன. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில், 'தங்கத்துக்கு வரி விதிக்கப்படாது' என அறிவித்தார். இந்த அறிவிப்பு, விலை உயர்வு தொடர்பான முதலீட்டாளர்களின் அச்சத்தை போக்கியதால், தங்கம் அதிகம் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2.90 லட்சம் ரூபாய்க்கு கீழ் வந்தது. சர்வதேச சந்தை நிலவரம் இந்தியாவிலும் பிரதிபலித்தது. சென்னையில் கடந்த 2 நாட்களில், 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து, 74,360 ரூபாயாக இருந்தது.