மேலும் செய்திகள்
சந்தை துளிகள்
12-Jul-2025
புதுடில்லி:நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அதிகரிக்கும் நோக்கில், பொதுத்துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி., மற்றும் என்.எல்.சி., நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.இதில், என்.டி.பி.சி., எனும் தேசிய அனல் மின் நிறுவனம், அதன் துணை நிறுவனத்தில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.மேலும், என்.எல்.சி., நிறுவனமும் அதன் துணை நிறுவனத்தில் 7,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. என்.டி.பி.சி.,
தேசிய அனல் மின் நிறுவனம், என்.ஜி.இ.எல்., எனும் அதன் துணை நிறுவனத்தில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.இந்த தொகையை என்.ஜி.இ.எல்., நிறுவனம் அதன் துணை நிறுவனங்களில் முதலீடு செய்து, வரும் 2032ம் ஆண்டுக்குள் 60 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை எட்டும்.இதன் வாயிலாக, நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் வளர்ச்சியும், மின்சார உள்கட்டமைப்பு திட்டங்களும் வலுப்பெறும் என்றும், இதனால் நாடு முழுதும் நம்பகமான, தடையற்ற மின்சாரம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் உள்ளூர் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.எல்.சி.,
நெய்வேலி லிக்னைட் நிறுவனம், என்.எல்.சி. இந்தியா ரெனியூவபிள்ஸ் என்ற அதன் துணை நிறுவனத்தில் 7,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது.இந்த முதலீடு என்.எல்.சி., நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் இலக்குகளை அடைய உதவியாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
12-Jul-2025