சிறுதொழில்களுக்கு ரூ.100 கோடி விரைவில் அரசின் கடன் உத்தரவாதம்
புதுடில்லி:எம்.எஸ்.எம்.இ., களுக்கு, 100 கோடி ரூபாய் வரை கடன் உத்தரவாதம் அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக, நிதி சேவைகள் துறை செயலர் நாகராஜு தெரிவித்துள்ளார்.கடந்தாண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இத்திட்டத்தை அறிவித்தார். இதன்படி, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை பிணையின்றி வாங்க ஏதுவாக, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் 100 கோடி ரூபாய் வரை கடன் உத்தரவாதம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.கடன் தொகை அதிகமாக இருக்கும்பட்சத்திலும், கடன் உத்தரவாதம் இவ்வாறே தொடரும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், கடன் பெறுபவர் ஒருமுறை உத்தரவாத கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், குறைந்து வரும் கடன் இருப்புக்கு ஏற்ப ஆண்டு உத்தரவாத கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்திட்டத்துக்கு விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலும், ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவு திறனை ஊக்குவிக்கும் வகையிலும், எம்.எஸ்.எம்.இ.,களுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக நாகராஜு தெரிவித்தார். நம் நாட்டின் எம்.எஸ்.எம்.இ., துறையில், 5 கோடி பேர் பணியாற்றுகின்றனர்.துறையின் ஏற்றுமதி நடப்பு 2024 - 25ல், 12.39 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.