ஈரோட்டில் மினி டைடல் பார்க் வடிவமைப்புக்கு அரசு டெண்டர்
சென்னை, செப். 9-ஈரோடு மாவட்டத்தில், மினி டைடல் பார்க் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை, 'டைடல் பார்க்' நிறுவனம் துவக்கியுள்ளது. சென்னை மட்டுமின்றி அனைத்து மாவட்டங் களிலும், தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பை உருவாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, முக்கிய நகரங்களில் மினி டைடல் பார்க் கட்டடம் கட்டி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட உள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் டெக்ஸ்வேலி அருகில், 60,000 சதுர அடியில் மினி டைடல் பார்க் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான வடிவமைப்பு மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசகரை தேர்வு செய்வதற்கு, டைடல் பார்க் நிறுவனம் தற்போது, 'டெண்டர்' கோரியுள்ளது. வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டதும், அதற்கு ஏற்ப மதிப்பீட்டு செலவை தயாரித்து, கட்டுமான பணிகளை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டம், டெக்ஸ்வேலி அருகில், 60,000 சதுர அடியில் மினி டைடல் பார்க் கட்ட, வடிவமைப்பு, திட்ட மேலாண்மை ஆலோசகரை தேர்வு செய்வதற்கு, 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.