உணவு நிறுவனங்கள் ஏற்றுமதியை அதிகரிக்க திருச்சியில் ஆய்வகம் அமைக்கிறது அரசு
சென்னை:உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் குறைந்த செலவில், ஏற்றுமதி தரத்தை உறுதி செய்ய திருச்சியில், 7 கோடி ரூபாயில் நவீன உணவு பகுப்பாய்வு ஆய்வகத்தை, தமிழக அரசின் டி.என்.எபெக்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளது. தமிழகத்தில் சிறுதானிய உணவு வகைகள், பால் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. சர்வதேச தரத்திற்கு ஏற்ப பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்ய பரிசோதிக்கும் பகுப்பாய்வு ஆய்வகங்கள் தமிழகத்தில் மிகவும் குறைவு. தனியார் ஆய்வகங்களில் சோதனைக்கு அதிக கட்டணத்தால் சிறு, குறு நிறுவனங்கள் சிரமப்படுகின்றன. எனவே, நவீன உணவு பகுப்பாய்வு ஆய்வகத்தை, திருச்சியில், 7 கோடி ரூபாயில், டி.என்.எபெக்ஸ் எனப்படும் தமிழக உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி மே ம்பாட்டு கழகம் அமைக்க உள்ளது. இந்த ஆய்வகம், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் நிறுவனங்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசிடம், 5 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டுள்ளது. திருச்சி உணவு ஆய்வகம் வாயிலாக, பொருட்களின் ஏற்றுமதி தரம் உறுதி செய்யப்படுவதுடன், ஏற்றுமதி சான்றும் வழங்கப்படும் மதுரை மாவட்டம், வேளாண் பல்கலை மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், 11 கோடி ரூபாயில் நவீன உணவு பகுப்பாய்வு ஆய்வகம் அமைகிறது