தொழில் கல்வியை மேம்படுத்த எச்.சி.எல்., - தமிழக அரசு கூட்டு
புதுடில்லி:தொழில்முனைவு மற்றும் தொழில் கல்வியை மேம்படுத்த, எச்.சி.எல்., அறக்கட்டளை நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஒன்று, தமிழக அரசின் 'ஸ்டார்ட்அப் டி.என்.,' உடன் இணைந்து, மூன்று ஆண்டுகளில் 100 ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை எச்.சி.எல்., அளிக்க வகை செய்கிறது. இதன் வாயிலாக, வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டுதல், இன்குபேஷன், சந்தை இணைப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.மற்றொரு ஒப்பந்தத்தின் கீழ், ஏற்கனவே உள்ள கூட்டாண்மையை புதுப்பிக்கும் வகையில், அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து, தொழிற்கல்வி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஐந்தாண்டு திட்டத்தை செயல்படுத்துவதாகும். இத்திட்டத்தின் கீழ், வசதி குறைந்தவர்கள் வசிக்கும் பகுதிகளில், திறன் ரதம் என்ற நடமாடும் ஆய்வகம் நிறுவுதல், தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்களில் பாடத்திட்ட மேம்பாடு மற்றும் ஐ.டி.ஐ.,களில் மாணவர்கள் மற்றும் பயிற்றுனர்களுக்கு தேவையான பயிற்சி உள்ளிட்டவைகளை வழங்குதல் அடங்கும்.