உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஓய்வுகால வாழ்க்கைக்கு எவ்வளவு சேமிப்பு தேவை?

ஓய்வுகால வாழ்க்கைக்கு எவ்வளவு சேமிப்பு தேவை?

நிம்மதியாக ஓய்வுகாலத்தை கழிப்பதற்கு தேவையான சேமிப்பு தொகையை கணக்கிடுவதும், திட்டமிடுவதும் பற்றி ஒரு கண்ணோட்டம்.கனவு வீடு போல, ஓய்வு கால திட்டமிடலில் ஈடுபடுபவர்கள் மனதிலும் எதிர்கால பாதுகாப்பிற்கு தேவையான சேமிப்புத் தொகை தொடர்பான ஒரு இலக்கு இருக்கும். ஓய்வு கால நிதியாக ஒரு கோடி ரூபாய் கைவசம் இருப்பது இலக்காக கருதப்பட்டு வருகிறது. இந்த இலக்கை மனதில் கொண்டு ஓய்வு கால சேமிப்பையும், முதலீட்டையும் திட்டமிடுவது அவசியம் என்றும் கருதப்பட்டது. இந்த நிதியை நோக்கி முன்னேறுவது பலருக்கு சவாலாக இருக்கும் நிலையில், மாறிவரும் வாழ்வியல் சூழலில் இந்த நிதி போதுமானதா? எனும் கேள்வியும் எழுகிறது. போதுமான சேமிப்பு நிதியுடன் முன்னதாக ஓய்வு பெறும் இலக்குடனும் இது தொடர்பு கொண்டுள்ளது. பணவீக்கம் ஒரு கோடி என்றில்லை, ஓய்வு கால நிதியாக எந்த தொகையை இலக்காக கொண்டிருந்தாலும், கவனத்தில் கொள்ள வேண்டிய வேறு முக்கிய அம்சங்கள் இருப்பதை உணர வேண்டும். ஓய்வுகால நிதிக்கு தேவையான தொகையை கணக்கிடுவதற்கு பல்வேறு வழிகள் முன்வைக்கப்படுகின்றன. எந்த வழியில் கணக்கிட்டாலும், பணவீக்கத்தின் தாக்கத்தை மனதில் கொள்ள வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கோடி ரூபாய் என்பது சொந்த வீடு வாங்கி, எஞ்சிய தொகையை வைப்பு நிதியில் போட்டு வைக்க போதுமானதாக இருந்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது. பணவீக்கத்தின் தாக்கத்தால் இந்த தொகையின் மதிப்பு கணிசமாக குறைந்திருக்கிறது. மேலும், எதிர்பாராத மருத்துவ தேவை அல்லது நெருக்கடி சேமிப்பின் பெரும்பகுதியை பாதிக்கலாம். மருத்துவ பணவீக்கமும் அதிகரித்து வருவதை உணர வேண்டும். அதே நேரத்தில் வாழ்வியல் தேவைகளும், செலவுகளும் அதிகரித்து வருகின்றன. வாழ்வியல் தேவைகள் சேமிக் கும் ஆற்றல் மீது தாக்கம் செலுத்தும். மாற்றுவழி வேலைவாய்ப்பு தொடர்பான நிரந்தர தன்மையும் மாறியிருக்கிறது. இவை எல்லாம், ஓய்வுகாலத்திற்கான சேமிப்பு மற்றும் திட்டமிடலை பாதிக்கலாம். இவற்றுக்கு மத்தியில் பிள்ளைகளின் எதிர்கால கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எனவே ஓய்வுகாலத்திற்கு தேவையான சேமிப்பு நிதியை கணக்கிடுவதில் மட்டுமல்ல திட்டமிடுதலிலும் மாற்றம் தேவை. குறிப்பிட்ட தொகையை இலக்காக கொண்டு செயல்படுவதை விட, ஒட்டுமொத்த நோக்கிலான அணுகுமுறையை பின்பற்றுவது நல்லது. ஒற்றை வருமானத்தை மட்டும் நம்பியிருக்காமல் துணை வருமானத்திற்கான வழிகளையும் கொண்டிருக்க வேண்டும். பகுதிநேர வேலை மூலம் வருமானம் ஈட்ட முடிந்தால் நல்லது. வாடகை வருமானத்திற்கும் வழி செய்து கொள்ள முயற்சிக்க வேண்டும். முதலீடு மூலமும் வருமானம் வர வேண்டும். சேமிப்பது மட்டும் போதுமானது அல்ல, சேமிப்பதை புத்திசாலித்தனமான முறையில் முதலீடு செய்ய வேண்டும். பாரம்பரியமான வைப்பு நிதி போன்றவற்றோடு மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட வாய்ப்புகளை நாட வேண்டும். எஸ்.ஐ.பி., எனும் சீரான முதலீடு வாய்ப்பையும் நாடலாம். முக்கியமாக எதிர்பாராத நெருக்கடியால் ஏற்படக்கூடிய செலவை சமாளிக்க கூடிய அவசர கால நிதியை உருவாக்கி கொள்ள வேண்டும். போதுமான ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு பாதுகாப்பு இருப்பதும் அவசியம். இந்த அம்சங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். இவற்றுக்கு ஏற்ற நிதி விழிப்புணர்வு பெற்றிருப்பதும் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி