சென்னையில் ஹூண்டாய் அமைக்கும் எரிசக்தி ஆலைகள்
சென்னை:'ஹூண்டாய் மோட்டார் இந்தியா' நிறுவனம், சென்னையில் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை அமைக்க உள்ளது. இதற்காக 'போர்த் பார்ட்னர் எனர்ஜி' நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.அடுத்த ஆண்டுக்குள், உற்பத்தி செயல்பாடுகளில் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள அதன் வாகன உற்பத்தி ஆலையில், இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை அமைக்க முடிவு செய்துள்ளது.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், இதற்காக அந்நிறுவனம் 75 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் மற்றும் 43 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தை அமைக்க, எப்.பி.இ.எல்., எனப்படும் போர்த் பார்ட்னர் எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.இந்த நீண்டகால ஒப்பந்தம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 25 ஆண்டுகளுக்கு வழங்குவதை உறுதி செய்கிறது. கூட்டு முயற்சியில் ஆலை அமைப்பதற்காக, ஹூண்டாய் நிறுவனம் 38 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.