அமெரிக்காவிலிருந்து வேளாண் பொருட்கள் இறக்குமதி இந்தியா பதிலடி கொடுக்குமோ என்ற அச்சத்தால் நிறுத்தம்
புதுடில்லி:இந்திய பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு, அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரிக்கு, இந்தியா பதிலடி கொடுக்கக்கூடும் என்ற அச்சத்தால், அமெரிக்காவில் இருந்து வேளாண் பொருட்கள் இறக்குமதி செய்வதை, இந்திய வணிகர்கள் நிறுத்தி வைத்து உள்ளனர். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகஸ்ட் 1ல் 25 சதவீத வரி விதித்தார். இரண்டாம் நிலை வரியாக, கூடுதலாக 25 சதவீத வரி விதித்ததால், மொத்த வரி, 50 சதவீதமானது. வரும் 27ம் தேதி முதல், இரண்டாம் நிலை வரி 25 சதவீதம் கூடுதலாக அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், அமெரிக்காவில் இருந்து பயறு வகைகள், பருப்புகள் உள்ளிட்ட வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட இந்திய வணிகர்கள், பொருட்களை கப்பலில் ஏற்றுவதை, ஆகஸ்ட் இறுதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய, சில அமெரிக்க நிறுவனங்கள் ஒப்பந்தம் பெற்ற நிலையிலும், இந்திய ஒப்பந்ததாரர்களிடம் இருந்து வினியோக அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அமெரிக்காவில் தற்போது பயறு, பருப்பு ரகங்களின் அறுவடை சீசன் துவங்கியுள்ள நிலையில், தங்கள் சோயாபீனை வாங்க, சீனா ஒப்பந்தம் ஏதும் செய்யாததால், விவசாயிகள், வணிகர்கள் கவலை அடைந்துள்ளனர். மக்காசோளத்துக்கும் குறைவான ஆர்டர்களே கிடைத்த சூழலில், இந்தியாவின் இறக்குமதி தாமதம் ஆவது, அவர்களின் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. கப்பல் போக்குவரத்துக்கு ஆறு வாரங்கள் வரை ஆகும் என்ற நிலையில், இந்தியா பதிலடியாக வரி விதித்தால், பயணத்தின் இடையே தங்கள் சரக்குகள் சிக்கும் அபாயம் உள்ளதாக, அமெரிக்க வணிகர்களும் அஞ்சுகின்றனர். இந்தியா பதிலடியாக வரி விதித்தால், பயணத்தின் இடையே தங்கள் சரக்குகள் சிக்கும் அபாயம் உள்ளதாக, அமெரிக்க வணிகர்களும் அஞ்சுகின்றனர்