சுசூகி கார் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்
டோக்கியோ, அக். 31-- சுசூகி நிறுவனத்தின் கார் ஏற்றுமதியில், உலகளவில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக சுசூகி மோட்டார் நிறுவனத்தின் தலைவர் டோஷிஹிரோ சுசூகி கூறியுள்ளார். ஜப்பானில் நடந்து வரும் வாகன கண்காட்சியில் அவர் கூறுகையில், “இந்தியா, எங்களின் மிக முக்கிய மற்றும் உலகின் பெரிய கார் சந்தை; இந்தியாவுக்காக பல திட்டங்களை வைத்துள்ளோம். உலக அளவில், உற்பத்தி செய்யப்படும் சுசூகி கார்களில், இந்தியாவின் பங்கு 61 சதவீதம். சுசூகி கார் விற்பனையில், இந்தியா 57 சதவீத பங்கை வைத்துள்ளது. இந்தியாவில், 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளோம்'' என்றார். கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்நிறுவனத்தின் இந்திய ஏற்றுமதி ஐந்து மடங்கு உயர்ந்து, 2025ம் நிதியாண்டில், 3.30 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில், இதை நான்கு லட்சமாக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளது.