தொழில் உற்பத்தி தரவுகள் முன்கூட்டியே வெளியிடப்படும்
புதுடில்லி:தொழில்துறை உற்பத்தி குறித்த தரவுகள், இனி ஒவ்வொரு மாதமும் 28ம் தேதி வெளியிடப்படும் என மத்திய புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது ஒரு மாதத்துக்கான தொழில்துறை உற்பத்தி தரவுகள், 42 நாட்கள், அதாவது ஆறு வாரங்களுக்கு பிறகே வெளியிடப்படுகிறது. புதிய நடைமுறையில் இது 28 நாட்களாக குறைகிறது. இதன்படி, இம்மாதம் முதல், 28ம் தேதி மாலை 4:00 மணிக்கு தரவுகள் வெளியிடப்படும்; 28 அன்று விடுமுறை தினமாக இருந்தால், அடுத்த வேலை நாளில் வெளியிடப்படும். பொருளாதார தரவுகள் வெளியிடப்படுவதற்கு ஆகும் நேரத்தை குறைப்பதற்கு அமைச்சகம் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும்; இதன் ஒரு பகுதியாக, தற்போது தொழில்துறை உற்பத்தி குறித்த தரவுகளை, இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.