உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / துல்லியமான இயந்திரங்களை தயாரிக்க தொழில்துறையினர் முன்வர வேண்டும்

துல்லியமான இயந்திரங்களை தயாரிக்க தொழில்துறையினர் முன்வர வேண்டும்

பெங்களூரு : இந்திய இயந்திர கருவிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 'இம்டெக்ஸ் பார்மிங் 2024' என்ற சர்வதேச இயந்திர கருவி மற்றும் உற்பத்தி தொழில்நுட்ப கண்காட்சி, பெங்களூருவில் நேற்று முன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கணகாட்சியை 'டைட்டன்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.கே. வெங்கடராமன் துவக்கி வைத்தார்.

பங்களிப்பு

அதன் பின்னர் அவர் பேசியதாவது:வரும் 2026ம் நிதியாண்டுக்குள், இந்தியா 415 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு உற்பத்தித் துறை, 83 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பங்களிக்க வேண்டும். இதற்கு இயந்திர கருவித் துறையில் இருந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பு தேவைப்படுகிறது. அந்த வகையில் அதிக துல்லியமான இயந்திரங்களைத் தயாரிக்க வேண்டும். மேலும், டைட்டானியம் மற்றும் பிற உலோகங்களில் அதிநவீன பாகங்களை உற்பத்தி செய்வதற்கான தற்போதைய தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும். பல வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் தங்கள் ஆலைகளை துவங்கி வருவதால், நம் நாடு 'உலகின் தொழிற்சாலை 2.0' ஆக முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

உந்து சக்தி

இதைத் தொடர்ந்து பேசிய 'கிர்லோஸ்கர் சிஸ்டம்ஸ்' நிறுவனத்தின் தலைவர் கீதாஞ்சலி கிர்லோஸ்கர் கூறுகையில், “உற்பத்தித் துறை அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் சிறப்பாகச் செயல்படும். “வாகனத் துறையும் இயந்திரக் கருவித் தொழிலும், ஒன்றின் வளர்ச்சி மற்றொன்றின் தேவையைத் துாண்டும் விதமாக செயல்பட்டு வருகின்றன. வாகனத் துறையின் வளர்ச்சி, பல ஆண்டுகளாக இயந்திரக் கருவிகளுக்கு உந்து சக்தியாக உள்ளது. “ஹைப்ரிட், மின்சார வாகனங்கள் மற்றும் ப்ளெக்ஸி எரிபொருள் இயந்திர வாகனங்களின் நுழைவு, இயந்திரக் கருவித் தொழிலுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதால், வாகனத் துறையின் சூழல் மாறி வருகிறது,” என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்