உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மின்னணு பொருட்கள் ஏற்றுமதிக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் அரசுக்கு தொழில்துறையினர் வேண்டுகோள்

மின்னணு பொருட்கள் ஏற்றுமதிக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் அரசுக்கு தொழில்துறையினர் வேண்டுகோள்

புதுடில்லி: சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா குறைத்துள்ள நிலையில், நம் நாட்டின் மின்னணு பொருட்கள் துறைக்கு அரசின் ஆதரவு திட்டங்கள் தொடர வேண்டும் என இத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக போர் பதட்டத்தை தணிக்க இரு நாட்டு அதிபர்களும் அண்மையில் தென் கொரியாவில் சந்தித்து பேசினர். இதன் பின், வரி விதிப்பை தளர்த்த இரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டன. இதைத்தொடர்ந்து, பென்டனில் மருந்து பிரச்னை தொடர்பாக சீன பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரியை 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்க அமெரிக்கா முடிவு செய்தது. இதனால் சீன மின்னணு பொருட்கள் மீதான வரியும் 10 சதவீதமாக குறைந்துள்ளது. இந்நிலையில், வரி விதிப்பு குறைக்கப்பட்டுள்ளதால், இந்திய மின்னணு பொருட்களுக்கும், சீன மின்னணு பொருட்களுக்கும் இடையிலான விலை வித்தியாசமும் குறைந்து உள்ளது. இதுகுறித்து 'இந்திய செல்லுலார் அண்டு எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன்' மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: சீன மின்னணு பொருட் கள் மீதான இறக்குமதி வரி 10 சதவீதமாக குறைந்து உள்ளது. இது இப்படியே நீடித்தாலோ அல்லது மேலும் குறைக்கப்பட்டாலோ இந்திய மின்னணு பொருட்களின் ஏற்றுமதி போட்டித்தன்மை பாதிப்புக்குள்ளாகும். மேலும், பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மற்றும் உற்பத்தியும் பாதிக்கப்படக் கூடும். கடந்த சில ஆண்டுகளாகவே சீனா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு கொள்கையால், இந்தியா பெருமளவில் பயனடைந்துள்ளது. இந்திய பொருட்களின் போட்டித்தன்மை அதிகரித்ததோடு, சர்வதேச அளவில் நிறுவனங்கள் வினியோக தொடரை மாற்றியமைத்தன. ஆனால், இந்த வரி குறைப்பு நடவடிக்கை அமெரிக்க சந்தைகளில் சீனாவின் போட்டித்தன்மையை மீண்டும் அதிகரிக்கக்கூடும். பி.எல்.ஐ., திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், சீனாவுடன் ஒப்பிடுகையில், இந்திய மின்னணு பொருட்கள் உற்பத்தி துறையின் செலவு குறைபாடு 19 சதவீதமாக இருந்தது. பி.எல்.ஐ., திட்டத்துக்கு பின் இது 12 சதவீதமாக குறைந்துஉள்ளது. எனவே, நாட்டின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியை பாதுகாக்க அரசு இதுபோன்ற ஆதரவு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ