உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கண்டுபிடிப்புக்கு ஆதரவளிக்கும் இன்னோவேஷன் - டி.என்., தளம்

கண்டுபிடிப்புக்கு ஆதரவளிக்கும் இன்னோவேஷன் - டி.என்., தளம்

சென்னை:தமிழகத்தில் உள்ள, 'ஸ்டார்ட்அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவ, புத்தொழில் மற்றும் புத்தாக்கத்திற்கான தகவல் தளத்தை, ஐ.ஐ.டி., மெட்ராஸ் மற்றும் தமிழக வழிகாட்டி நிறுவனம் உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகின்றன.

புத்தொழில் மற்றும் புத்தாக்கத்திற்கான தகவல் விபரங்களை தெரிந்து கொள்வதற்கு, 'இன்னோவேஷன் - டி.என்.,' தளத்தை, வழிகாட்டி நிறுவனமும், ஐ.ஐ.டி., மெட்ராஸ் கல்வி நிறுவனமும் அறிமுகம் செய்துள்ளன. இந்த தளம், தமிழக புத்தொழில் சூழல் அமைப்பின் விரிவான செயல்பாடுகள் குறித்த விபரங்களை வழங்குவதுடன், முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு கண்டுபிடிப்பு திறனை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது. இது, புதிய தயாரிப்புகள், சேவைகளை சந்தைப்படுத்த தேவையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், திறன் மேம்பாட்டிற்கும் வழி செய்கிறது. இதுகுறித்து, தொழில் துறை அமைச்சர் ராஜா கூறுகையில், ''புதிய கண்டுபிடிப்புக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், தொழில்முனைவோருக்கு சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கு புத்தாக்க தகவல் தளம் உதவும்; பெருநகரங்கள் மட்டுமின்றி, மாவட்டந்தோறும் வேலைவாய்ப்புகள் எளிதில் கிடைக்க கூடிய வகையில் உறுதி செய்ய வேண்டும்,'' என்றார். ஐ.ஐ.டி., மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கூறுகையில், ''துறை சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தவும், பொருத்தமான கொள்கைகளை வகுக்கவும், திட்டங்களை உருவாக்கவும் இந்த இணையதளம் உதவும்'' என்றார். ஆகஸ்ட் நிலவரப்படி, தமிழகத்தில், 19,000 புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன புத்தொழில் நிறுவனங்கள் 2.20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் 1.20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை புத்தொழிலகள் ஈர்ப்பு 45 புத்தொழில் நிறுவனங்கள் தலா, 200 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்துள்ளன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி