வெளிநாட்டு கரன்சி மாற்றத்துக்கு உடனடி செட்டில்மென்ட் வசதி
மும்பை:ரியல் டைம் எனப்படும் உடனுக்குடன் வெளிநாட்டு பணத்தை பரிமாற்றம் செய்யக்கூடி, எப்.சி.எஸ்.எஸ்., என்ற செட்டில்மென்ட் வசதியை, மும்பையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார். வெளிநாட்டு கரன்சி வர்த்தகத்தில் பணப்பரிமாற்றத்துக்கு வங்கி உட்பட இடைத்தரகர்கள் தலையீட்டுடன் 36 முதல் 48 மணி நேரம் ஆனது. இதை தவிர்க்கும் வகையில், கிப்ட் சிட்டியில், ஐ.எப்.எஸ்.சி., எனப்படும் இந்தியா இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் சென்டருடன் இணைந்து ரியல் டைம் கரன்சி பரிமாற்ற வசதி துவங்கப்பட்டுள்ளது. இதற்காக சர்வதேச நிதி மையங்களான ஹாங்காங், டோக்கியோ, மணிலா ஆகிய நகரங்களுடன் கிப்ட் சிட்டி மற்றும் ஐ.எப்.எஸ்.சி., ஆகியவை கைகோர்த்துள்ளன. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பின்டெக் நிறுவனங்கள் துறையில் இந்தியா மூன்றாம் இடம் வகிப்பதாகவும், உலகின் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா 50 சதவீத பங்கு வகிப்பதாகவும் கூறினார்.