கல்தார் மாம்பழ உற்பத்தி 1,500 ஹெக்டேராக உயர்வு
சென்னை: சீசனில்லாத காலங்களில் மாம்பழங்களை விளைவிக்க கல்தார் முறையை உற்பத்தியாளர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு 500 ஹெக்டேராக இருந்த கல்தார் மாம்பழ உற்பத்தி, தற்போது 1,500 ஹெக்டேராக உயர்ந்துள்ளது என, வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேளாண் விஞ்ஞானிகள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக வழக்கமான ஏப்., மே, ஜூன் மாத சீசனில் மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. கிலோ 3 முதல் 7 ரூபாய் வரை தான் விலை கிடைக்கிறது. இதனால் சீசனில்லாத மாதங்களான அக்., நவ., டிச., மாதங்களில் தோத்தாபுரி, அல்போன்சா, செந்துாரா ஆகிய ரகங்களில், கல்தார் முறையில் மாம்பழங்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் வாயிலாக கிலோ 30 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பத்தாண்டுகளுக்கு முன்பு 500 ஹெக்டேராக இருந்த கல்தார் முறை மாம்பழ உற்பத்தி, தற்போது 1,500 ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இந்த முறையை அதிகம் பயன்படுத்துவது ஆபத்தானது. மாமரங்களில் கல்தார் பயன்படுத்தும்போது அதன் செயல்பாடு பாதிக்கிறது. நாளடைவில் மாமரங்களின் காய்ப்பு திறன் பாதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.