உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.6,000 கோடிக்கு தீபாவளி வர்த்தகம் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தகவல்

ரூ.6,000 கோடிக்கு தீபாவளி வர்த்தகம் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தகவல்

திருப்பூர்:தீபாவளி கால உள்நாட்டு பின்னலாடை வர்த்தகம், இதுவரை 6,000 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளதாக, திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூரில் உற்பத்தியாகும் பருத்தி நுாலிழை பின்னலாடைகள், நாடு முழுதும் விற்பனைக்கு செல்கின்றன. ஆண்டு முழுதும் உற்பத்தி நடந்து வந்தாலும், செப். - அக்., மாதங்களின் தீபாவளி கால ஆர்டர்களுக்கான உற்பத்தி முக்கியமானது. வடமாநிலங்களில், தசரா பண்டிகை விற்பனையால், சரக்கு தீர்ந்து விடும் என்பதால் தீபாவளிக்கு திருப்பூருக்கு வடமாநில வியாபாரிகள் அதிக அளவு ஆர்டர் கொடுக்கின்றனர். பின்னலாடைகள் மட்டுமல்லாது, தரமான பருத்தி நுாலிழையில் தயாரிக்கப்படும் இருபாலருக்கான உள்ளாடை விற்பனையும், தீபாவளி பண்டிகை ஆர்டரில் அதிகம் இடம்பெறுகின்றன. கடந்த செப். மாதம் 2வது வாரத்தில் துவங்கி, தொடர்ந்து, ஆடைகள் அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. சிறப்பு தள்ளுபடி சலுகையுடன் தமிழகம் முழுதும் விற்பனை பரபரப்பாக நடந்து வருகிறது. தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் சண்முக சுந்தரம் கூறுகையில், 'முன்கூட்டியே, சிறுவருக்கான ஆடைகள் உட்பட, பின்னலாடை மற்றும் உள்ளாடைகள் உற்பத்தி செய்து அனுப்பி விட்டோம். இரண்டாம் கட்ட ஆர்டர்களும், ஓரிரு நாளில் அனுப்பி வைக்கப்படும். இந்தாண்டு, தீபாவளி பண்டிகைகால வர்த்தகம், 20 சதவீதம் அதிகரித்துள்ளது; மொத்தம், 6,000 கோடி ரூபாய்க்கு அதிகமாக வர்த்தகம் நடந்திருக்கும்,' என்றார். தீபாவளி கால திருப்பூர் உள்நாட்டு வர்த்தகம் 2023 - ரூ.4000 கோடி 2024 - ரூ.4800 கோடி 2025 - ரூ.6000 கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ