மீண்டும் கார் விலையை உயர்த்தும் மாருதி
புதுடில்லி : தயாரிப்பு செலவுகள் அதிகரிப்பால், கார்களின் விலையை, நான்கு சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக மாருதி சுசூகி அறிவித்துள்ளது. வரும் ஏப்.,1 முதல் இந்த உயர்வு அமலுக்கு வருகிறது.இது குறித்து மாருதி சுசூகி தெரிவித்ததாவது:உள்ளீட்டு பொருட்கள் மற்றும் இயக்கச் செலவுகள் அதிகரித்து வருவதால், கார்களின் விலை 4 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. தொடர்ந்து செலவை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறோம். இருப்பினும், அதன் சிறிய பகுதியை வாடிக்கையாளர்களுக்கும், சிலவற்றை சந்தைக்கும் கடத்த வேண்டிய சூழலில் உள்ளோம். கார்களின் மாடல்களை பொறுத்து, விலை உயர்வு மாறுபடும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.ஏற்கனவே ஜனவரியில் 4 சதவீதம் கார் விலையை உயர்த்தியது. தொடர்ந்து, பிப்.,1ம் தேதி கார்களின் விலையை 32,500 ரூபாய் வரை உயர்த்திய நிலையில், தற்போது வரும் ஏப்.,1 முதல் மீண்டும் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில், நடப்பாண்டில் மட்டும் மூன்றாவது முறையாக கார்களின் விலை உயர்த்துகிறது மாருதி.