டயர் இறக்குமதி உரிமத்தை தொடர மத்திய அரசிடம் மிஷலின் பேச்சு
சென்னை:பயணியர் கார் டயர்களின் உற்பத்தி, சென்னை ஆலையில் துவங்கும் வரை, அதன் இறக்குமதி உரிமத்தை நீட்டிக்க எதிர்பார்ப்பதாக மிஷலின் நிறுவன தலைமை செயல் அதிகாரி ப்லோரன்ட் மினிகாஸ் தெரிவித்துள்ளார்.இந்த நிறுவனத்தின், உற்பத்தி ஆலை, சென்னை அருகிலுள்ள கும்மிடிப்பூண்டியில் உள்ளது. 2014ல் துவங்கப்பட்ட இந்த ஆலையில், லாரி மற்றும் பஸ் டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.இந்த ஆலையை விரிவாக்கம் செய்து, பயணியர் கார் டயர்களை உற்பத்தி செய்ய, கடந்த ஆண்டில் 564 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இதன் உற்பத்தி மூன்றாம் காலாண்டில் துவங்க உள்ளது.உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், 2020ம் ஆண்டுக்கு பிறகு, மத்திய அரசு பல்வேறு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதித்தது. அதனால், இங்கு பிரீமியம் மற்றும் சொகுசு கார் டயர்களை, குறைந்த அளவில் இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது இந்நிறுவனம். இந்நிலையில், பயணியர் கார் டயர்களின் இறக்குமதியை தொடர, மத்திய அரசிடம் பேச்சு நடத்தி வருகிறது இந்நிறுவனம்.