உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சர்வதேச சவாலை சந்திக்கும் மலைத்தோட்ட விளைபொருட்கள்

சர்வதேச சவாலை சந்திக்கும் மலைத்தோட்ட விளைபொருட்கள்

கோவை:மலைத்தோட்ட பயிர்களான தேயிலை, ரப்பர், காபி, மிளகு, ஏலக்காய் உற்பத்தி மற்றும் வணிகத்தில் சர்வதேச சவாலை இந்தியா எதிர்கொள்கிறது. இதுகுறித்து கோவையில் நடந்த தமிழ்நாடு தோட்ட அதிபர்கள் சங்கத்தின் 72வது பொதுக்குழு கூட்டத்தில், தோட்ட அதிபர்கள் சங்க தலைவர் வினோதன் கந்தையா பேசியதாவது: சர்வதேச அளவில் சீனாவில் கடந்தாண்டு தேயிலை உற்பத்தி, 5 சதவீதம் உயர்ந்து, 40 கோடி டன்னாக அதிகரித்தது. 2024ல் இது உலக உற்பத்தியில் பாதியாக இருந்தது. அதேசமயம், இந்தியாவில் தேயிலை உற்பத்தி சற்றே குறைந்துள்ளது. காபிக்கு சர்வதேச அளவில் தேவை அதிகரித்து வருகிறது. உலக காபி உற்பத்தியில் பாதிக்கும் மேல் பிரேசில், வியட்நாம் பங்களிக்கிறது. இந்தியா 7வது இடத்தில் தான் உள்ளது. ரப்பர் உற்பத்தி 2024ல், 1.8 சதவீதம் உயர்ந்தது. இதில், தாய்லாந்து, இந்தோனேசியாவின் பங்களிப்பு அதிகம். இயற்கை ரப்பரின் விலை, சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. ஏலக்காய் உற்பத்தியில், 2024-25ம் ஆண்டு, உலக அளவில் 45 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகம் உற்பத்தி செய்யும் நாடான கவுதமாலாவில், பூச்சிகளின் தாக்குதலால் உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியாவில் 18 சதவீதம் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், விலை அதிகரித்துள்ளது. உலக அளவில் மிளகு உற்பத்தியில், வியட்நாம் அதிக பங்கு வகிக்கிறது. இந்தியாவின் மிளகு உற்பத்தி, 2024-25ல், 78,000 டன்னில் இருந்து 75,000 டன்னாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. தட்பவெப்ப நிலை சாதகமாக இல்லாததால், இந்நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள சாதகமற்ற அரசியல், அதிகார சூழ்நிலை, மலைத்தோட்ட விளைபொருட்களின் வணிகத்துக்கு சவாலாகவே இருந்து வருகிறது. வரும் ஆண்டிலும் இறக்குமதி வரி விதிப்பால், சவால்கள் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். 'தோட்ட பயிர்களுக்கு ஏற்கனவே உள்ள சட்டம் போதும்' சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயலர் அதுல் ஆனந்த் பேசுகையில், “தோட்ட பயிர்களுக்கு என தனி இயக்குநரகம் உருவாக்க, அதிபர்கள் கோரிக்கை விடுத்தபோது, வியப்பாக இருந்தது. வன பாதுகாப்புக்கு என பல்வேறு சட்டங்கள், விதிமுறைகள் உள்ளன. தோட்ட அதிபர்களுக்கும் வலுவான சங்கம் இருப்பதால், பிரச்னைகளை எளிதாக பேசி தீர்க்க முடியும். ''தோட்ட பயிர்கள் தொழில், 100 ஆண்டுகளுக்கும் மேலானது. ஏற்றுமதியில் இப்பொருட்களின் பங்களிப்பு 14 சதவீதமாக உள்ளது. சந்தை சவால்களை சமாளித்து ஏற்றுமதி வணிகத்தில் பங்கேற்க வேண்டும்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ