மும்பை:ஜி.எஸ்.டி., கட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விதியை பயன்படுத்தி, ஏற்றுமதியாளர்களுக்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை, மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
ஜி.எஸ்.டி., கட்டமைப்பில் விதி 96(10) என்பது சில வரிச்சலுகைகளைப் பயன்படுத்தும் ஏற்றுமதியாளர்கள், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., தள்ளுபடியை பெற தடையாக இருந்தது. இந்த விதி தொடர்பாக, பல ஆண்டுகளாக ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஜி.எஸ்.டி., அதிகாரிகள் இடையே சர்ச்சை, குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: ஒரு முறை விதிகள் நீக்கப்பட்ட பின்னர், அதன் கீழ் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் தாமாக முடிவுக்கு வந்துவிடும். பழைய வழக்குகளுக்கான விதிகள் நீக்கப்பட்ட பின்னர், வழக்குகள் தொடர எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை. விசாரணைகள் அல்லது மேல்முறையீடுகளின் போது செலுத்தப்பட்ட தொகைகளை, ஏற்றுமதியாளர்கள் உடனடியாக திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். மேலும், ரீபண்டு தொகைக்கு வட்டியும் சேர்த்துத் திரும்பப் பெற வழிவகை செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதியாளர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக நிலவி வந்த நிச்சயமற்ற தன்மையை, ஐகோர்ட் உத்தரவு முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக சட்ட வல்லுநர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், உடனடியாக ரீபண்டு தொகையை கோரி, ஏற்றுமதியாளர்களை விண்ணப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். பணப்புழக்க அழுத்தத்தைக் குறைத்து, கடுமையான உலகளாவிய சந்தையில் இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டித்தன்மையை வலுப்படுத்தும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, நாடு முழுதும் இதேபோன்ற வழக்குகளுக்கு வழிகாட்டியாக இருக்கும். ஏற்றுமதியாளர்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த நிம்மதியை அளித்துள்ளது என, தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.