இயற்கை வைரம் விலை 10 சதவீதம் உயர்வு
அதிகரித்து வரும் தேவை காரணமாக, இயற்கை வைரத்தின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். உலகின் முக்கிய சந்தைகளில் அதிகரித்து வரும் நுகர்வோர் தேவை காரணமாக, இயற்கை வைரத்தின் விலை, கடந்த இரண்டு மாதங்களில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த நுகர்வோரின் தேவை அதிகரிப்பே, இயற்கை வைரம் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது இந்தாண்டு முழுதும் தொடரும் என, தொழில்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். காரட், வெட்டு, நிறம் மற்றும் தெளிவு ஆகியவற்றின் அடிப்படையில், விலை வேறுபட்டாலும், நல்ல தரமான வைரத்தின் சராசரி விலை தற்போது காரட் ஒன்று 5 லட்சம் ரூபாயாக உள்ளது. இது ஜனவரி துவக்கத்தில் 4.5 லட்சம் ரூபாயாக இருந்தது. அதிகம் பயன்படுத்தப்படும் வைரத்தின் விலை, 2.7 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சூரத்தில் வேலைநிறுத்தம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சூரத் வைரத் தொழிலாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். சம்பள உயர்வு, தொழிலாளர்களுக்கான நிதி தொகுப்பு மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலக சந்தையில் ஏற்பட்ட மந்தநிலையால் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ரத்தன்தீப் திட்டத்தை அறிவிப்பது உள்ளிட்ட நீண்டகால பிரச்னைகளை தீர்க்க தவறிய குஜராத் மாநில அரசைக் கண்டித்து, சூரத் வைரத் தொழிலாளர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். வேலைநிறுத்தத்தால் 500 கோடி ரூபாய் வைர மெருகூட்டல் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. சூரத்தில் 4,000 வைரம் மெருகூட்டும் ஆலைகள் உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.