ஜி.எஸ்.டி., இ - இன்வாய்ஸ் பதிவேற்றத்தில் புதிய மாற்றம்
புதுடில்லி:'இ - இன்வாய்ஸ்' எனும் மின்னணு விலைப் பட்டியல் தொடர்பான விதிமுறைகளில், ஜி.எஸ்.டி., நெட்வொர்க் அமைப்பு, புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி, வரும் ஏப்ரல் 1 முதல், இ - இன்வாய்ஸ் பெற்ற 30 நாட்களுக்குள், நிறுவனங்கள் அதை 'இன்வாய்ஸ் ரெஜிஸ்டிரேஷன் போர்ட்டலில்' பதிவேற்றம் செய்யாவிட்டால், உள்ளீட்டு வரிப் பயனை பெற இயலாது.இதுவரை, ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு கூடுதலான வர்த்தகம் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்திய நிலையில், வரும் ஏப்ரல் முதல், 10 கோடி ரூபாய்க்கு கூடுதலாக வர்த்தகம் செய்யும் நிறுவனங்களும் இந்த விதியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறு நிறுவனங்களும் இதை பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.விளைவு என்ன? தாமதமாக பதிவேற்றினால், இன்வாய்ஸ் ரெஜிஸ்டிரேஷன் போர்ட்டல் அதை ஏற்றுக்கொள்ளாது; நிராகரித்து விடும் இதனால் பொருட்களை வாங்கும் நிறுவனங்கள், உள்ளீட்டு வரிப் பயனை பெற இயலாது ரீபண்டு பெறுவதில் சிக்கல் ஏற்படும் விற்பனையாளர்கள் வரி செலுத்துவது பாதிக்கப்படும்.
புதிய படிவம் அறிமுகம்
ஜி.எஸ்.டி., - டி.ஆர்.சி., 03 ஏ என்ற புதிய படிவத்தையும் ஜி.எஸ்.டி., நெட்வொர்க் அறிமுகப்படுத்தி உள்ளது. வரி செலுத்துவோர், வரி தொடர்பான கோரிக்கைகளை திறம்பட கையாள ஏதுவாக, இந்த படிவம் ஜி.எஸ்.டி., போர்ட்டலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.