பயணியர் கார் விற்பனை 4% உயர்வு
புதுடில்லி: ஜி.எஸ்.டி., குறைப்பு மற்றும் பண்டிகை கால தேவை காரணமாக, கடந்த மாதம் பயணியர் கார் விற்பனை 4.40 சதவீதம் அதிகரித்துள்ளதாக 'சியாம்' எனும் இந்திய வாகன தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த மாதத்துக்கான அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: செப்டம்பர் மாதத்தில் 26.17 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்தாண்டு செப்டம்பரில் 24.62 லட்சமாக இருந்தது. ஜி.எஸ்.டி., குறைப்பு கடந்த மாதம் 22ம் தேதி தான் நடைமுறைக்கு வந்தது. எனவே, செப்டம்பரில் வெறும் ஒன்பது நாட்கள் மட்டுமே இது நடைமுறையில் இருந்தது. இருப்பினும், இதுவரை எந்த ஒரு செப்டம்பரிலும் இல்லாத வகையில், நடப்பாண்டு செப்டம்பரில் பயணியர் வாகன விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது. நடப்பாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இரு சக்கர வாகன விற்பனை ஏழு சதவீதமும்; மூன்று சக்கர வாகன விற்பனை 10 சதவீதமும் அதிகரித்துள்ளது. பயணியர் கார் விற்பனை, காலாண்டு அடிப்படையில் 1.50 சதவீதம் குறைந்துள்ளது. எதிர்கால கண்ணோட்டத்தை பொறுத்தவரை, அரசின் ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் வாகன துறைக்கு கூடுதல் வலுசேர்த்துள்ளதால் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன வகை செப்., 2024 செப்., 2025 வளர்ச்சி (%) இரு சக்கரம் 20,25,993 21,60,889 7.00 மூன்று சக்கரம் 79,683 84,077 5.50 பயணியர் கார் 3,56,752 3,72,458 4.40 மொத்தம் 24,62,428 26,17,424 6.29