சிப்காட் பூங்காவில் தயார் நிலை தொழிற்கூடம்
சென்னை:தமிழக அரசின் சிப்காட் நிறுவனம், பெரிய தொழில் நிறுவனங்கள் ஆலை அமைக்க பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் தொழில் பூங்காக்களை அமைக்கிறது. அதன்படி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், 2,622 ஏக்கரில் தொழில் பூங்கா உள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவவும், அந்நிறுவனங்களின் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யவும், பெருந்துறை தொழில் பூங்காவில், 5 ஏக்கரில் பயன்பாட்டு கட்டடம் உட்பட, 49,794 சதுர அடியில், 'பிளக் அண்டு பிளே' எனப்படும் தயார் நிலை தொழிற்கூடத்தை சிப்காட் அமைத்துள்ளது. இதுவே, சிப்காட்டின் முதல் தயார் நிலை தொழிற்கூடம். இதை, தொழில் நிறுவனங்களுக்கு வாடகை விடும் பணியில் சிப்காட் ஈடுபட்டுள்ளது.