மேலும் செய்திகள்
கிரைம் பிராஞ்ச் போலீசின் 'ஈயம் பூசும் வேலை'
21-Jan-2025
மும்பை:சென்னையைச் சேர்ந்த 'சுஜாதா பயோடெக்' நிறுவனத்தின் பிரபல வெல்வெட் ஷாம்பூ பிராண்டை, ரிலையன்ஸ் குழுமத்தின் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான ஆர்.சி.பி.எல்., கையகப்படுத்தியுள்ளது.வணிக உலகில், சாஷே வடிவில் ஷாம்பூ உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களை சிறிய அளவில், மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்த பெருமைக்குரிய நிறுவனம் சுஜாதா பயோடெக். இந்நிறுவனத்தின் பிரபல பிராண்டான வெல்வெட் ஷாம்பூவை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம், கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும், எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்ற விபரம் வெளியாகவில்லை.சமீப ஆண்டுகளாக வெல்வெட் பிராண்டில், பல்வேறு தனிநபர் அழகு பராமரிப்பு மற்றும் வீட்டுப் பராமரிப்பு பொருட்கள் சந்தையில் விற்பனையில் உள்ளன. வெல்வெட் ஷாம்பூ விற்பனையில் கிடைத்த வரவேற்பு காரணமாக, இதே பிராண்டில் பல புதிய பொருட்கள் தயாரிப்பில் சுஜாதா பயோடெக் நிறுவனம் வணிக விரிவாக்கம் செய்தது.தமிழகத்தைச் சேர்ந்த வெல்வெட் பிராண்டை கையகப்படுத்தி உள்ளதன் வாயிலாக, நுகர்வோர் பொருட்கள் சந்தையில் மேலும் தனது இடத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள ரிலையன்ஸ் திட்டமிட்டு உள்ளது. “ரிலையன்ஸ் குடும்பத்துக்குள் வெல்வெட் பிராண்டை வரவேற்பதில் சிலிர்ப்படைகிறோம்; வெல்வெட் ஷாம்பூவின் வியக்கத்தக்க வரலாறும், புதுமை கண்டுபிடிப்பும் தனிநபர் பொருட்களில் பல லட்சக்கணக்கானோரை அடைந்துள்ளதும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது” என ஆர்.சி.பி.எல்., தலைமை செயல் அதிகாரி கேத்தன் மோடி தெரிவித்தார்.
ஒரு காலத்தில் ஷாம்பூவை வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. அவர்களால் மட்டுமே பெரிய பாட்டிலில் வரும் ஷாம்பூவை வாங்கி வைத்துக்கொள்ள முடிந்தது. இந்த நிலையை மாற்றி, சாதாரண மக்களும் தங்கள் தேவைக்கு ஏற்ப வாங்கி பயன்படுத்திக்கொள்ள வசதியாக, முதன் முதலில் குறைந்த விலையில் சாஷேவில், 'வெல்வெட்' எனும் பெயரில் ஷாம்பூவை அறிமுகம் செய்தார் கடலுாரைச் சேர்ந்தவரான சி.கே.ராஜ்குமார். இதன் தொடர்ச்சியாக இருமல் மருந்தான 'நிவாரண் 90, மெமரி ப்ளஸ்' என பலவற்றை அவரது சுஜாதா பயோடெக் நிறுவனம் சாஷேக்களில் அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்தே, சலவைப் பவுடர், இன்ஸ்டன்ட் காபி, தேங்காய் எண்ணெய் என கிட்டத்தட்ட அனைத்து விதமான பொருட்களும் சாஷேவில் வரத் துவங்கின. இதனால், 'சாஷே கிங்' என பெயரெடுத்தார் ராஜ்குமார்.
21-Jan-2025