உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரிலையன்ஸ் - என்விடியா ஏ.ஐ., உள்கட்டமைப்பு முயற்சி

ரிலையன்ஸ் - என்விடியா ஏ.ஐ., உள்கட்டமைப்பு முயற்சி

மும்பை:முகேஷ் அம்பானியின் 'ரிலையன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுக்கான உள்கட்டமைப்பு வசதியை உருவாக்க உள்ளதாக, 'என்விடியா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் தெரிவித்துஉள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 'சிப்' தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் செயற்கை நுண்ணறிவு மாநாடு, மும்பையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்ற ஜென்சன் ஹுவாங் தெரிவித்ததாவது: இந்தியா மென்பொருள் தயாரித்து அதை ஏற்றுமதி செய்து வந்தது. அதேபோல, எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவையும் உலகுக்கு ஏற்றுமதி செய்யும். இந்த புதிய தொழில் துறை புரட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க, இங்குள்ள அனைவருடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்க, இந்தியாவிடம் உள்ளது போல ஒரு வரைவு தொழில்நுட்பம் தேவை. அடுத்ததாக தரவுகள் தேவை. இறுதியாக செயற்கை நுண்ணறிவுக்கான உள்கட்டமைப்பு தேவை. இந்தியாவில் அதை உருவாக்க, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துஉள்ளோம். இவ்வாறு தெரிவித்தார். மாநாட்டில் பங்கேற்று பேசிய முகேஷ் அம்பானி, செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு அமைப்பதற்கான மிகப்பெரிய நுண்ணறிவு சந்தையாக இந்தியா விளங்கும் என தெரிவித்தார். இங்குள்ள இளைஞர் சக்தி, இந்த கனவை நனவாக்கும் என அவர் தெரிவித்தார்.

'இந்திய நிறுவனங்களுடன்

இணைந்து செயல்படுவோம்'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய பங்களிப்பாளராக இந்தியா உருவெடுத்து வருவதால், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற 'என்விடியா, மைக்ரோசாப்ட், மெடா' உள்ளிட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. என்விடியா நிறுவனம் தரவு மையங்கள் அமைப்பதற்காக ஏற்கனவே கடந்தாண்டு ரிலையன்ஸ், டாடா நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த நிலையில், தற்போது 'டெக் மஹிந்திரா, பிளிப்கார்ட்' உள்ளிட்ட நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் இறங்கியுள்ளது. டெக் மஹிந்திரா நிறுவனத்துக்கு ஹிந்தி மொழி சார்ந்த செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை உருவாக்குவதிலும்; பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு பேசித் தெரிந்து கொள்ளும் வகையில் நுகர்வோர் சேவையை உருவாக்கித் தரவும் என்விடியா இணைந்து செயல்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ