ரயிலில் லாரிகளை கொண்டு செல்ல கூடுதல் பெட்டிகளுக்கு கோரிக்கை
புதுடில்லி: பொதுத்துறையைச் சேர்ந்த 'டெடிக்கேட்டட் பிரைட் காரிடார் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' நிறுவனம், தன் டிரக் ஆன் டிரெய்ன் சேவைக்காக கூடுதல் ரயில் பெட்டிகளை வழங்குமாறு ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து நெருக்கடிகள், உணவுப்பொருட்களின் பாதுகாப்பு, எரிபொருள் சிக்கனம், சுங்கச்சாவடி கட்டணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த சேவை அறிமுகப்படுத்தப் பட்டது. அதன்படி, பால் டேங்கர் கள், லாரிகள், கன்டெய்னர் கள் ஆகியவை ரயில்களில் எடுத்துச் செல்லப்படும். இவற்றை பயன்படுத்தும்போது லாரி ஓட்டுநர்கள் அதே ரயிலிலேயே அவர்களுக்கான பிரத்யேக பெட்டியில் ஓய்வெடுத்தபடி பயணிக்கலாம். தங்களது நிறுத்தம் வந்தபிறகு வாகனங்களை இறக்கி அவற்றை ஓட்டிச்சென்று பொருட்களை டெலிவரி செய்யலாம். பணியை முடித்தபிறகு காலி வாகனங்கள் அதே ரயிலில், பயணம் தொடங்கிய இடத்துக்கே வந்து சேரும். சரக்குப் போக்குவரத்துத்துறையில் ஒரு புரட்சியாக இந்த சேவை பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிகரிக்கும் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் பெட்டிகளை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.