உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க கோரிக்கை

நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க கோரிக்கை

சென்னை:'பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்', மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தொழில்முனைவோரிடம் எழுந்துள்ளது. நாட்டில் உணவு சார்ந்த தொழிலில் ஏராளமான குறுந்தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை முறையான அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகின்றன. எனவே, நாட்டில் உள்ள குறு நிறுவனங்கள், தரமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க, பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தை, 2020 - 21ல் மத்திய அரசு துவக்கியது. இத்திட்டத்தின் கீழ், தனிநபர், மகளிர் குழுக்கள் உணவு பதப்படுத்தும் தொழில் துவங்குவதற்காக, திட்ட மதிப்பீட்டில், 35 சதவீதம் அல்லது அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, சுய உதவிக் குழுவினர் தங்களுக்கு பொது உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த, திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சம் 35 சதவீதம் அல்லது அதிகபட்சம் 3 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு சிறு கருவி, மூலப்பொருள் வாங்க, 40,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, தொழில்முனைவோர் கூறியதாவது: நாட்டிலேயே பிரதம மந்திரி குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தை பீஹார், தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா, உ.பி., ஆகிய மாநிலங்கள் தான் சிறப்பான முறையில் செயல்படுத்தி உள்ளன. பழச்சாறு, சிப்ஸ் உள்ளிட்ட உணவு பொருட் கள் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ள பெரிய, கார்ப்பரேட் நிறுவனங்கள், விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு விளைபொருட்களை வாங்கி, அவற்றை மதிப்புக் கூட்டி, அதிக விலைக்கு விற்கின்றன. ஏற்றுமதியும் செய்கின்றன. இதனால் அந்நிறுவனங்கள் மட்டுமே அதிக லாபத்துடன் பயன்பெறுகின்றன. எனவே, குறு நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு, இந்த திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். இதை, தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார். மானிய வசதிகள்  திட்ட மதிப்பீட்டில் ரூ.10 லட்சம் வரை  பொது உள்கட்டமைப்பு வசதிக்கு ரூ.3 கோடி  சிறு கருவி மூலப்பொருள் வாங்க ரூ.40,000


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை