மேலும் செய்திகள்
12 சதவிகிதம் வளர்ச்சியில் 'இ- - வே பில்'
10-May-2026
சென்னை: வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க ரயில், பஸ்சில், 25,000 ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லப்படும் சரக்குகளுக்கு, 'இ - ரயில் பாஸ், இ - பஸ் பாஸ்' முறையை அமல்படுத்த கோரி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து, சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ், 50,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சரக்குகளை ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் போது, 'இ - வே பில்' எனப்படும் மின்னணு ஆவணத்தை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். தவறுக்கு இடமில்லை இதை, அதற்கென மத்திய அரசு உருவாக்கியுள்ள இணையதளத்தில் எடுத்து கொள்ள வேண்டும். மேலும், 5 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் வர்த்தகம் இருந்தால், 'இ - இன்வாய்சிங்' எனப்படும் மின்னணு விலை பட்டியலை உருவாக்க வேண்டும். இவற்றின் வாயிலாக, வரி செலுத்துவதில் தவறு செய்ய முடியாது. வலியுறுத்தல் ஆனால், சில வணிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக பஸ்கள், ரயில்களில் அதிகளவில் சரக்குகளை ஏற்றி அனுப்புகின்றனர். எனவே, இதை தடுக்க, 25,000 ரூபாய்க்கு மேல் பஸ், ரயில்களில் எடுத்து செல்லப்படும் சரக்குகளுக்கு, 'இ - ரயில் பாஸ், இ - பஸ் பாஸ்' முறையை அமல்படுத்த கோரி, டில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு அளித்தோம். மேலும், துாய்மை பணியார்கள், பாதுகாப்பு பணியாளர்களை வழங்கும் சேவை சார்ந்த துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு விதிக்கப்படும், 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்குமாறும் வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைகள் மீது, உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
10-May-2026