தங்க கலவை இறக்குமதிக்கு கட்டுப்பாடு மின்னணு உற்பத்தியை பாதிக்கும் அபாயம்
புதுடில்லி:தங்க கலவை எனப்படும் தங்க சேர்மங்கள் மீதானா இறக்குமதி கட்டுப்பாட்டால், இந்திய மின்னணு பொருள் உற்பத்தியாளர்கள் இரட்டை பாதிப்பை சந்திப்பதாக தொழில் துறையினர் கவலை தெரிவித்துஉள்ளனர்.கணினி சில்லுகள் மற்றும் மின்னணு கூறுகள் முதல் மின்சார வாகனங்கள், காற்றாலை விசையாழிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வரையிலான உற்பத்தியில் அரிய மண் காந்தங்கள் பல்வேறு பயன்பாடுகளை கொண்டு உள்ளன. இந்நிலையில், இந்த அரிய மண் காந்த ஏற்றுமதிக்கு சமீபத்தில் சீனா கட்டுபாடுகள் விதித்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 17ம் தேதி மத்திய வர்த்தக அமைச்சத்தின் கீழ் இயங்கும் டி.ஜி.எப்.டி., எனப்படும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில், விலை மதிப்பற்ற உலோகங்கள் மற்றும் சேர்மங்களின் இறக்குமதியை, இலவசம் என்பதில் இருந்து கட்டுப்படுத்தப்பட்ட வகை என, மறுவகைப்படுத்தப்படுவதாக தெரிவித்திருந்தது.ஏற்கனவே, அரிய மின்காந்த பொருட்கள் ஏற்றுமதியில் சீனா விதித்த கட்டுப்பாடுகளுடன் போராடி வரும் தொழில் துறையினர், தற்போது மத்திய அரசின் தங்க கலவை மீதான இறக்குமதிக்கு விதித்துள்ள கட்டுப்பாட்டால், நாட்டின் மின்னணு உற்பத்தித் துறை இரட்டைப் பாதிப்பை சந்திப்பதாக கவலை தெரிவித்துஉள்ளனர். இக்கட்டுப்பாடுகளால், உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதுடன், நொய்டா மற்றும் தென்மாநிலங்களில் ஆடியோ எலக்ட்ரானிக்ஸ் பிரிவில், 21,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.