உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மின் வாகன லோகோ போட்டி வெற்றியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு

மின் வாகன லோகோ போட்டி வெற்றியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு

சென்னை :தமிழகத்தில் மின் வாகனங்களுக்காக ஒருங்கிணைந்த 'லோகோ' எனப்படும் வடிவமைப்பு உருவாக்க பசுமை எரிசக்தி கழகம் நடத்திய போட்டியில், சிவகாசியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் மின் வாகனம், 'சார்ஜிங்' மையம் அமைக்கும் பணிகளை மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் மேற்கொள்கிறது. இது, ஐ.டி.டி.பி., இந்தியா நிறுவனத்துடன் இணைந்து, மின் வாகனங்களுக்கு ஒருங்கிணைந்த லோகோவை உருவாக்க போட்டியை கடந்த ஆகஸ்டில் அறிவித்தது. வெற்றி பெறும் வடிவமைப்பு, தமிழகத்தின் அனைத்து மின் வாகன முயற்சிகளுக்குமான லோகோவாக தேர்வாகும் என அறிவிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று லோகோவை உருவாக்கி அனுப்பிய நிலையில், தற்போது போட்டி முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. சிவகாசியைச் சேர்ந்த அரவிந்த் உருவாக்கிய, 'எழில் வழி' என்ற 'லோகோ' தேர்வாகி உள்ளது. அவருக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. சென்னையைச் சேர்ந்த சதீஷ் இரண்டாம் இடத்தையும், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஓவியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இரண்டாம் பரிசாக 30,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 20,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ