தென்னை நாரில் மதிப்பு கூட்டு பொருட்கள் தொழில் துவங்க ரூ.1.50 கோடி மானியம்
சென்னை:தென்னை நாரில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதை அதிகரிக்க, மதிப்பு கூட்டுதல் ஊக்குவிப்பு திட்டத்தை, தமிழக அரசு துவக்கியுள்ளது. தமிழகத்தில் தேங்காய் மட்டையில் இருந்து தென்னை நார், துகள் பிரித்து எடுக்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்தி தரை விரிப்பு, மிதியடி, கலைப் பொருட்கள், காங்கிரீட் உலர்தளம், பசுமைக்குடில், மாசு கட்டுப்பாட்டு உபகரணங்கள், சாலையை வலுப்படுத்த உதவும் தென்னை நார் புவிவிரிப்பு, நடைபாதைக்குப் பயன்படும் தென்னை நார் தரைவிரிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் குறைவு தமிழகத்தில் தென்னை நார் மற்றும் துகள் அதிகம் கிடைத்தும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் குறைவாக உள்ளன. கேரளாவில் உள்ள நிறுவனங்கள், தமிழகத்தில் இருந்து தென்னை நார், துகளை வாங்கி, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து, நெதர்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ், 'டான்காயர்' எனப்படும் தமிழக கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் உள்ளது. இது, தென்னை நார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பயிற்சி, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அளிக்கிறது. இந்நிறுவனம் வாயிலாக, தமிழகத்தில் தென்னை நார் சார்ந்த மதிப்பு கூட்டுதல் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க, மதிப்பு கூட்டுதல் ஊக்குவிப்பு திட்டத்தை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், கடந்த ஏப்ரலில் சட்ட சபையில் அறிவித்தார். தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ள இத்திட்டத்தின் கீழ், தென்னை நார், துகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் தொழில் துவங்குவோருக்கு இயந்திரங்கள் மதிப்பில், 25 சதவீதம் மூலதன மானியம் அதிகபட்சம், 1.50 கோடி ரூபாய் வரை வழங்கப்படும். ஊக்குவிப்பு திட்டம் இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் தென்னை நாரில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து, ஏற்றுமதி செய்வது ஊக்குவிக்கப்பட உள்ளது. இதற்காக, தென்னை நார் மதிப்பு கூட்டுதல் ஊக்குவிப்பு திட்டம், 13.60 கோடி ரூபாய் நிதியில் துவக்கப்பட்டுள்ளது. கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட தொழில் மையங்களுடன் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்தும். தென்னை நார் தொழில் துவங்க விரும்புவோர், மாவட்ட தொழில் மையம் அல்லது கோவை அவிநாசி சாலையில் உள்ள கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தை அணுகலாம். இவ்வாறு கூறினார். மானியம் தாராளம் தொழில் துவங்க, 25 சதவீதம் மூலதன மானியம் அதிகபட்சம், 1.50 கோடி ரூபாய் வரை மானியம் தரச்சான்று செலவுக்கு, 100 சதவீதம் மானியம் தேசிய தரச்சான்றுக்கு அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் சர்வதேச தரச்சான்றுக்கு, ரூ.10 லட்சம் வரை மானியம் திறன் பயிற்சி மத்திய தென்னை நார் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய 'பேக்கேஜிங்' நிறுவனம் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து, 1,500 சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு, தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி தமிழகத்தை பயன்படுத்தும் கேரளா நாட்டின் மொத்த தென்னை நார், துகள் சந்தையில் தமிழகத்தின் பங்கு 65 சதவீதம். ஆனால், மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் கேரளாவில் அதிகம்.