உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சீரான வளர்ச்சியில் சேவை துறை பணியமர்த்தல்கள் புதிய உச்சம்

சீரான வளர்ச்சியில் சேவை துறை பணியமர்த்தல்கள் புதிய உச்சம்

புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த மாதம் பெரிய மாற்றம் ஏதும் இன்றி, வளர்ச்சிப் பாதையிலேயே தொடர்ந்ததாக எச்.எஸ்.பி.சி., வங்கியின் பி.எம்.ஐ., குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பணியமர்த்தல்கள் இதுவரை இல்லாத உச்சம் தொட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்.எஸ்.பி.சி., வங்கி, தகவல் தொழில்நுட்பம், ஹோட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, மாதந்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா நிறுவனம் இதற்கான தரவுகளை திரட்டி வருகிறது. மே மாதத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சேவைகள் துறை வளர்ச்சியை குறிக்கும் பி.எம்.ஐ., குறியீடு, கடந்த ஏப்ரல் மாதத்தில் 58.70 புள்ளிகளாக இருந்த நிலையில், மே மாதத்தில் 58.80 புள்ளிகளாக சற்றே அதிகரித்து, மூன்று மாத உச்சத்தை எட்டியுள்ளது. இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியைக் குறிக்கும்; குறைவாக இருந்தால் சரிவைக் குறிக்கும். வலுவான சர்வதேச தேவை, புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் ஆகியவை வளர்ச்சி தொடர காரணமாக அமைந்தன. தேவையை சமாளிக்க பணியமர்த்தல்கள் இதுவரை இல்லாத உச்சம் தொட்டுள்ளது. இதனிடையே, கடந்த மாதத்துக்கான கூட்டு பி.எம்.ஐ., வளர்ச்சி 59.30 சதவீதமாக சற்றே குறைந்துள்ளது. இது, கடந்த ஏப்ரலில் 59.70 சதவீதமாக இருந்தது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ