வினியோக லாரி பற்றாக்குறை கார் விற்பனை பாதிக்கப்பட வாய்ப்பு
சென்னை: புதிய ஜி.எஸ்.டி., அமலானது முதல் கார் விற்பனை உயர்ந்துள்ளதால், உற்பத்தி ஆலைகளில் இருந்து ஷோரூம்களுக்கு எடுத்து செல்லும் லாரிகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், கார் விற்பனை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுதும் கார்களை வினியோகஸ்தர்களுக்கு கொண்டு சேர்க்க, 15,000, லாரிகள் செயல்பட்டு வருகின்றன. பராமரிப்பு ஒவ்வொரு லாரியும், காரின் அளவை பொறுத்து, 8 முதல் 10 கார்களை கொண்டு செல்ல முடியும். பொதுவாக இதில், 2,000 லாரிகள் பராமரிப்பு மற்றும் சரிபார்ப்பிற்காக நிறுத்தப்படும். பண்டிகை நாட்கள் துவங்கிய செப்., 22ம் தேதி முதல் அனைத்து லாரிகளும் செயல்பாட்டில் இருந்தாலும், கார்களை வினியோகிப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனங்கள் கூறியதாவது: செப்., 22க்கு பிறகு, கார் விற்பனை அதிகரிக்கும் என்று தெரிந்தும், கார் நிறுவனங்கள் முன்கூட்டி திட்டமிடவில்லை. அவர்கள் தாமதமாக செயல்பட்டதே லாரிகள் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம். தாமதம் லாரி பற்றாக்குறை காரணமாக, உரிய காத்திருப்பு காலத்திற்குள் கார்களை வாடிக்கையாளர்களுக்கு வினியோகிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, மஹிந்திரா நிறுவனம், கார் வினியோகத்தை விரைவுபடுத்த திட்டமிட்டு வருகிறது. அதேசமயம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கார் விற்பனை அதிகரிக்கும் என்பதை எதிர்பார்த்து, முன்னரே திட்டமிட்டதால், கார் வினியோகத்தில் தடங்கல் ஏற்படவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.