60,000 தொழில்முனைவோருக்கு 5,000 கோடி ரூபாய் கடனுதவி ஆக்மி 2025 கண்காட்சியில் ஸ்டாலின் தகவல்
சென்னை:“பல்வேறு சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில், 59,915 புதிய தொழில்முனைவோருக்கு, 2,031 கோடி ரூபாய் மானியத்துடன், 5,209 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அம்பத்துார் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், 'ஆக்மி 2025' சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று துவக்கி வைத்தார். வரும் 23ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், இயந்திர கருவிகள், லேசர் தொழில்நுட்பம், டிஜிட்டல் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 468 தொழில் நிறுவனங்களின் நவீன தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில், இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில், இந்நிறுவனங்கள் வாயிலாக, 2.47 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகிஉள்ளது.பல்வேறு சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் கடந்த நான்கு ஆண்டு களில், 59,915 புதிய தொழில்முனைவோருக்கு, 2,031 கோடி ரூபாய் மானியத்துடன், 5,209 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப் பட்டு இருக்கிறது. வேலைவாய்ப்பை உருவாக்குவதில், வேளாண்மைக்கு அடுத்த இடத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சிறுதொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு முன்னேற்றம் காண வேண்டும். அதற்கு, நிறுவனங்களுக்கு துணையாக அரசு உறுதியாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
'ஆக்மி 2025' கண்காட்சி
நவீன இயந்திரங்கள் விலையை ஒப்பிட்டு பார்க்கலாம் முதலீட்டாளர்களை சந்திக்க வாய்ப்பு உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு உடனடி கடன் வசதி.